/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று நீட் தேர்வு: கரூரில் 1,596 பேர் பங்கேற்பு
/
இன்று நீட் தேர்வு: கரூரில் 1,596 பேர் பங்கேற்பு
ADDED : மே 04, 2025 02:10 AM
கரூர், கரூரில், இன்று நடக்கும் நீட் தேர்வில், 1,596 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் சித்தா, யுனானி, ேஹாமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டே, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 2025--26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது. அதில், கரூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் (இரண்டு மையத்தில்) 960 பேர், கரூர் வெள்ளியணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 299 பேர், கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 337 பேர் என மொத்தம், 1,596 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு பிற்பகல், 2:00 மணிக்கு தொடங்கி மாலை, 5:20 மணி வரை நடக்கிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி உட்பட, 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.
பின்பற்ற வேண்டிய நடைமுறை
தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஹால்டிக் கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை, 11:30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம், 1:30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை.
ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும். பெண் தேர்வர்கள் ஆபரணங்கள், அலங்காரங்கள் இல்லாமல் எளிய மற்றும் வசதியான ஆடைகளை அணிந்து வர வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் தேர்வு நடக்கும் நான்கு மையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.