ADDED : ஜன 01, 2024 11:42 AM
கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, கோவை சாலை பிரிவு மொச்சகொட்டாம்பாளையம் செல்லும் பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்க கோரி, பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனால், மொச்சகொட்டம்பாளையம் பகுதியில், கடந்த மாதம் புதிதாக தார்ச்சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. ஆனால், உரிய நேரத்தில் தார்ச்சாலை அமைக்கவில்லை.
இந்நிலையில், அவ்வப்போது பெய்த மழையால், சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்டதால், ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன. இதனால், அதன் வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, டூவீலர்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மொச்சகொட்டாம்பாளையத்தில், புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.