ADDED : மார் 24, 2025 06:47 AM
குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
கரூர்: கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு உள்ளது. அந்த வழியாக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கும், சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.இந்நிலையில், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால், குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மனைவி மாயம்: கணவன் புகார்
கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை கத்தாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 42; இவரது மனைவி தனலட்சுமி, 35; கடந்த, 21 காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர், உறவினர்களின் வீடுகளுக்கும் தனலட்சுமி செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் மணிகண்டன், 42, போலீசில் புகாரளித்தார். புகார்படி, வெள்ளியணை போலீசார், மாயமான தனலட்சுமியை தேடி வருகின்றனர்.
சாலை சீரமைப்பு பணி; பூமி பூஜை செய்து துவக்கம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ரெங்கநாதபுரம், மணவாசி பஞ்சாயத்துக்குட்பட்ட மேட்டங்கிணம் முதல் நத்தமேடு வரை உள்ள சாலை; திருக்காம்புலியூர் பஞ்சாயத்து, மாயனுார் சேங்கல் சாலை முதல் முத்துரெங்கம்பட்டி வழி நரிக்குறவர் சாலை; சித்தலவாய் பஞ்சாயத்து, மாயனுார், சேங்கல் சாலை முதல் டவுன் பஞ்சாயத்து சாலை; கீழ முனையனுார் சாலை; சேங்கல் பஞ்சாயத்து மாணிக்கபுரம் சாலை; முத்துரெங்கம்பட்டி முதல் பம்பரமுத்தம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க, பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ம.க.,செயற்குழு கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட பா.ம.க., சார்பில், மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில், செயற்குழு கூட்டம், நேற்று தனியார் ஓட்டலில் நடந்தது. அதில், வரும் மே, 11ல் நடக்கவுள்ள வன்னியர் இளைஞர் பெருவிழாவில், கரூர் மாவட்டத்தில், 100 வாகனங்களில் சென்று பங்கேற்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரிகளை பாதுகாக்க வரும், 29ல் நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும், கரூர் மாவட்டத்தில் கல் குவாரிகளில் கள ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட தலைவர் தமிழ்மணி, கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் மணி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 29ல் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கரூர்: 'வரும், 29ல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை நிகழ்ச்சி நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி, வரும், 29 காலை, 9:00 மணிக்கு, கரூர் காந்திகிராமம், அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில், காலை, 9:00 முதல், 4:00 மணி வரை நடக்கிறது. உயர்கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகின்றனர். இதில், மாணவர்கள், தங்களது பெற்றோர், ஆசிரியருடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பூவன் வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ரஸ்தாலி, பூவன், கற்பூரவள்ளி ரக வாழைகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். விளைந்த வாழைத்தார்களை தினந்தோறும் அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைத்தார் ஏல சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதில், பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாலி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகம் வாங்கி சென்றனர்.
வேன் மீது டூவீலர் மோதி ஒருவர் பலி
கரூர்: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை காளம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ் குமார், 32; இவர் கடந்த, 22 இரவு, 'பஜாஜ்' டூவீலரில், வெள்ளியணை அருகே கரூர்-திண்டுக்கல் சாலை தேவகவுண்டனுார் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'ஈச்சர்' வேனின் பின் பகுதியில், சதீஷ்குமார் ஓட்டி சென்ற டூவீலர் மோதியது. அதில், தலை மற்றும் நெஞ்சு பகுதியில் காயமடைந்த சதீஷ்குமார் உயிரிழந்தார்.இதுகுறித்து, சதீஷ்குமாரின் மனைவி லாவண்யா, 23, கொடுத்த புகார்படி, நாமக்கல்லை சேர்ந்த வேன் டிரைவர் இசாத் அகமத், 32, என்பவர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
முன்விரோத தகராறு; 3 பேர் மீது வழக்கு
குளித்தலை: குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., மாடு விழுந்தான் பாறையை சேர்ந்தவர் ராணி, 50; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. கடந்தாண்டு மார்ச், 28ல், ராணி, இவரது கணவர் செல்வராஜ், மகன் ஆகியோர் வீட்டில் இருந்தபோது, முருகேசன் அவரது மனைவி ஹேமமாலினி, உறவினர் ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். ராணி, நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, குளித்தலை போலீசார், மூவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கல்
கரூர்: கரூர் ஜவகர்பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், மாவட்ட தி.மு.க., சார்பில் தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளரும், மின் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். இந்த, நிழற்குடை ஆண்டுதோறும் வழங்கப்படும். அதன்படி, 1,000 பேருக்கு நிழற்குடை வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி மேயர் கவிதா, கரூர் மாநகர செயலாளர் கனகராஜ், பகுதி செயலாளர்கள் கணேசன், சுப்ரமணியன், ராஜா, ஜோதிபாசு, குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மணல் கடத்தல்: 2 பேர் மீது வழக்கு
குளித்தலை: குளித்தலை அடுத்த வதியம் பஞ்., கீழகுறைப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த், 32; அதே ஊரை சேர்ந்த பிரதீப், 27, ஆகிய இருவரும், நேற்று முன்தினம் மாலை, காவிரி ஆற்றிலிருந்து மணல் அள்ளி மூட்டைகளை கட்டி, கடத்தி செல்ல முயன்றனர். ஆனால், ரோந்து சென்ற குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரியை பார்த்தவுடன், இருவரும் தப்பி ஓடினர். இதையடுத்து, மணல் மூட்டை மற்றும் டூவீலர்களை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.