ADDED : மே 07, 2024 07:23 AM
சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
கிருஷ்ணராயபுரம் : சிந்தலவாடி, மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, அம்மன் சிறப்பு வாகன அலங்காரத்தில் கொண்டு செல்லப்பட்டு வழிபாடு நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்து, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடத்தப்பட்டது. லாலாப்பேட்டை சுற்றியுள்ள கிராம மக்கள், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூக்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நீர், மோர் பந்தல் திறப்பு
கரூர் : கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் மற்றும் சங்கமம் அறக்கட்டளை சார்பில், கரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. பொது மக்களுக்கு நீர், மோர், தண்ணீர், கம்பங்கூழ் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், நடராஜா வள்ளியப்பன், தங்கவேல், சண்முகம் மற்றும் சங்கமம் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கிருஷ்ணராயபுரத்தில் கிளைகள் அகற்றும் பணி
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணாரயபுரம் பஸ் ஸ்டாப் அருகில், மழை காரணமாக விழுந்த மரக்கிளைகளை, டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.கரூர் - திருச்சி நெடுஞ்சாலை கிருஷ்ணராயபுரம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலை பஸ் ஸ்டாப் அருகில் இரண்டு மரங்கள் இருந்தன. நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் இரண்டு மரக்கிளைகள் முறிந்து கீழே விழுந்தன. இதனால் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள், மரக்கிளைகளை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
குப்பை கழிவு கொட்டுவதால் நோய் தொற்று அபாயம்
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சியில் இருந்து, கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீத்தப்பட்டி காலனி பகுதி அமைந்துள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மலைக்கோவிலுார் ஊராட்சியை சேர்ந்த இப்பகுதியில், குப்பை தொட்டிகளோ குப்பை அள்ளுவதற்கு துாய்மை பணியாளர்களோ பணியமர்த்தப்படவில்லை. எனவே, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். மேலும்,கோழி கழிவுகளை கொட்டிச் செல்வதால் அதிகப்படியான துர்நாற்றம் ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே இதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.