ADDED : ஜூன் 18, 2024 07:19 AM
லாலாப்பேட்டை மாரியம்மனுக்கு கரகம் பாலித்து திருவீதி உலா
கிருஷ்ணராயபுரம் : லாலாப்பேட்டை, கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, அம்மன் கரகம் பாலித்து திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு காவிரி ஆற்றில் இருந்து அம்மன் கரகம் பாலித்து திருவீதி உலா கொண்டு வரப்பட்டது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டது. நாளை அம்மன் திருத்தேரில், லாலாப்பேட்டை முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மண்டல பூஜைகள் நடத்தப்படுகிறது.
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா
கிருஷ்ணராயபுரம் : செக்கணம் கிராமத்தில் உள்ள, சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபி ேஷக விழா நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூர் பஞ்சாயத்து செக்கணம் கிராமத்தில் சித்திவிநாயகர் கோவில் உள்ளது. கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, யாகசாலை பூஜை நடந்தது.நேற்று அதிகாலை நேரத்தில் கோ பூஜை, விக்கேனஸ்வர பூஜை, இரண்டாம் கால பூஜை நடந்தது. காலை, 7:30 மணிக்கு சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
அரவக்குறிச்சி : சின்னதாராபுரம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தன்னாசியப்பன் கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டபோது, தண்டபாணி, 58, என்பவர் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த சின்னதாராபுரம் போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 1,000 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மொபட் திருட்டு: போலீசில் புகார்
கரூர் : கரூர் அருகே, நிறுத்தப்பட்டிருந்த மொபட்டை காணவில்லை என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், வெங்கமேடு பாங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 57; இவர் கடந்த, 30ல், வீட்டுக்கு முன்புறம், ஆக்டிவா மொபட்டை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டை, திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசில் கண்ணன் புகார் செய்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ் பூத்தை மாற்றணும்
கரூர் : கரூர் அருகே திருமாநிலையூரில் போக்குவரத்தை சீர் செய்ய, போலீசாருக்கு நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது அது பழுதான நிலையில் உள்ளது. அதில், போலீசாரால் நின்று கொண்டு, போக்குவரத்தை கவனிக்க முடியவில்லை. போக்குவரத்து போலீசாரும், சாலையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், ராயனுார் சாலையில் இருந்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே போலீசாரின் நிழற்கூடத்தை புதுப்பிக்க வேண்டும்.
குப்பையை அப்புறப்படுத்தலாமே
கரூர் : கரூர் அருகே, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையில், குப்பை தொட்டி வைக்கப்படவில்லை. இதனால் சாலையில் கொட்டப்படுகிறது. குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சங்கடத்தில் உள்ளனர். எனவே, சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையில், கொட்டப்பட்டுள்ள குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.