ADDED : ஜன 05, 2024 11:13 AM
மாநகராட்சி மேல்நிலை
பள்ளியில் மாணவி
தற்கொலை முயற்சியா?
கரூர், மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவி கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்துள்ளார்.
கரூர், பசுபதிபாளையத்தை சேர்ந்த, 17 வயது மாணவி மாநகராட்சி பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். நேற்று மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு, மாணவி பள்ளியின் முதல் தளத்திலிருந்து விழுந்துள்ளார். இதில் காயமடைந்த அவரை, ஆசிரியைகள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது தவறுதலாக விழுந்தாரா? என, கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உன்னுாத்துப்பாளையத்தில்
ரத்த பரிசோதனை முகாம்
கரூர் மாவட்டம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உன்னுாத்துப்பாளையம் பகுதியில் காய்ச்சல் குறித்த ரத்த பரிசோதனை நடந்தது. ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் உன்னூத்து பாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
தவுட்டுப்பாளையம்
பகவதி அம்மன் கோவில்
திருவீதி உலா
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகில் கட்டிபாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் திருவிழா ஜன., 1- ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி கும்பம் பாலித்து தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்து பகவதி அம்மன், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின், உற்சவர் பகவதி அம்மன், மகாமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதிஉலா நடந்தது. இதையடுத்து கிடாவெட்டுதல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடந்தது.
தண்ணீர்பள்ளம் பகுதியில்
மின்சாரமின்றி தவிப்பு
குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் கடந்த, ஐந்து நாட்களாக குடியிருப்புகளில் மின்சாரம் இன்றி உள்ளது. மேலும் குறைந்த அளவு மின்சாரம் வந்ததால், பொது மக்கள் பயன்படுத்தி வரும் 'டிவி', பிரிட்ஜி ஆகியவை சேதம் ஏற்பட்டது.
இரவு நேரங்களில் மின்சாரம் இன்றி குழந்தைகள் உட்பட அனைவரும் துாங்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, மின்சார வாரியத்திற்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் நலன் கருதி, அக்ரஹாரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்து, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மது பிரியர்களின் கூடாரமாகும் பயணிகள் நிழற்கூடங்கள்
அரவக்குறிச்சி, தேசிய நெடுஞ்சாலையின் இரு பிரிவு சாலைகளில் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக பயனற்ற நிலையில் இருந்து வருகிறது. இவ்
வழியாக டாஸ்மாக் கடைக்கு சென்று வரும் குடிமகன்கள், நிழற்கூடங்களை மது குடிக்கும் பாராக உபயோகித்து வருகின்றனர்.
அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இரவு, 11:00 மணி வரை குடிமகன்களின் கூச்சலால் இடையூறாக இருந்து வருகிறது. நெடுஞ்சாலை அலுவலர்களிடம் புகாராக தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் கூறினர்.
நெடுஞ்சாலையில் மண் அரிப்பு
தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்
குளித்தலை அடுத்த மருதுாரில் இருந்து, மேட்டுமருதுார் வழியாக பணிக்கம்பட்டி, நல்லுார், கள்ளை, பேரூர், தோகைமலை உள்ளிட்ட கிராமங்களுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இதில் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மருதுார், மேட்டுமருதுார் தார்ச் சாலைக்கு இடையே இரு புறங்களிலும் பாசனம் மற்றும் வடிகால் கண்ணாறு உள்ளது. விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்ததால் சாலையின் அளவு குறைந்து வருகிறது.
மண் அரிப்பை தடுக்கவும், ஆக்கிரமிப்பை அகற்றவும், இச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், டவுன் பஞ்.. நிர்வாகம் சாலையின் இரு புறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி மாணவிகள் மாயம்
தீவிரமாக தேடும் போலீஸ்
கரூர் அருகில், ராயனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த, 13 வயது மூன்று மாணவிகள் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள், நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். மாலையில் வீடு திரும்பாததால், மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, மூன்று பேரும் பள்ளிக்கு வராதது தெரியவந்துள்ளது. உறவினர், தெரிந்தவர்களின் வீடுகளில் தேடியுள்ளனர். மாணவிகள் கிடைக்காத காரணத்தால், தான்தோன்றிமலை போலீசில் புகார் அளித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மினி பஸ் மூலம், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிந்து அறநிலையத்துறையை கண்டித்து
ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூச விழாவிற்கு, தடை விதித்த ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து, குளித்தலையில் நகர ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
நகர தலைவர் துரை தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சரவணன், நகர பா.ஜ., தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வக்கீல் அணி தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பேசினர். நுாற்றுக்கும் மேற்பட்ட ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
அரசாணை-243 ஐ திரும்ப பெறுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, குளித்தலை வட்டார கல்வி அலுவலகம் முன் நேற்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார். அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பிரதிநிதி மணிகண்டன், சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர்
தேக்கமலை நன்றி கூறினார்.
கரூரில் வி.சி.க.,வினர்
கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர், ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். தமிழகத்தில் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். 21 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும். 2024 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை நடை
முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
காணொளி காட்சியில் ஒளிபரப்பு
'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு துவக்க விழா காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு துவக்க விழா வரும் ஜன.,7 ல் நடக்கிறது. இதில், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், கரூர் குமாரசாமி பொறியியல் கல்லுாரி, புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரி, காருடையாம்பாளையம் வி.எஸ்.பி பொறியியல் கல்லுாரி, காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, குளித்தலை அரசு கல்லுாரி, பள்ளபட்டி, அப்துல் லத்தீப் மகளிர் கல்லுாரி, கரூர் கொங்கு கலை கல்லாரி, கரூர்சங்கர வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, கரூர், பரணி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, கரூர், ஆத்துார் தொழிற்பேட்டையில் ஆகிய இடங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. www.tngim2024.com என்ற வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
பள்ளி எதிரில் குப்பை எரிப்பு
கரூர், தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நுாற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி எதிரே குப்பை கொட்டப்படுகின்றன. சிலர் குப்பைக்கு தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். புகை மண்டலம பள்ளி வளாகத்தை சுற்றுவதால் பலர் சிரமப்படுகின்றனர். பள்ளி அருகே குப்பை எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரியில் தண்ணீர் நிரப்ப
நடவடிக்கை தேவை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்குட்பட்ட ஏராளமான பகுதிகள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இந்த பகுதிகளை சுற்றிலும், அதிகளவு வாழை பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பஞ்சப்பட்டி ஏரி, 170 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரி மட்டும் நிரம்பினால் இந்த தாலுகாவின் பஞ்சம் தீர்ந்து விடும். ஆனால், ஏரி நிரம்பி பல ஆண்டுகள் ஆகி விட்டன. மழைக் காலங்களில் வீணாகும் காவிரி நீரை, வாய்க்கால் வெட்டி இந்த ஏரியில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை
க.பரமத்தி அருகே, தென்னிலை துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, ஒரு கிராம செவிலியர் மட்டும் சிகிச்சை அளித்து வருகிறார். அவ்வப்போது நடக்கும் மருத்துவ முகாம்களில் மட்டுமே டாக்டர்கள் வந்து செல்கின்றனர். துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி டாக்டர்கள், செவிலியர்களை நியமித்து இப்பகுதி மக்களுக்கு முழு நேர மருத்துவ உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி வீட்டில் 17 பவுன்தங்க நகை திருட்டு
நொய்யல் அருகில் விவசாயி வீட்டில், 17 பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குந்தாணிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 52. இவர், காலையில் விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 70 ஆயிரம் ரூபாய், 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழாகோபி அருகே அளுக்குளியில், செல்லாண்டியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் கொடியேற்று விழா மற்றும் அம்மை அழைப்பு நடந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று நடந்தது. அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீள குண்டத்தில், தலைமை பூசாரி செந்தில், காலை, 7:00 மணிக்கு பூஜை செய்து முதலில் இறங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அளுக்குளி, கோபிபாளையம், கணபதிபாளையம், செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராசிபுரத்தில்
278 கிலோ பட்டுக்கூடு ஏலம்
ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 278 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினமும் இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 278.3 கிலோ விற்பனையானது.
அதிகபட்சமாக கிலோ, 420 ரூபாய், குறைந்தபட்சமாக, 300 ரூபாய்க்கு விற்பனையானது. 169.75 கிலோ பட்டுக்கூடு, 1.01 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக கிலோ, 356.50 ரூபாய்க்கு விற்பனையானது.
வடை மாலை சாத்தக்கோரி
இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 10 ஆண்டுகளாக ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்துப்படி நடைபெறுகிறது. இந்நிலையில், வரும், 11ம் தேதி நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்துப்படி இல்லை என்ற தகவல் கோவில் நிர்வாகம் மூலம் வெளியானது. இதை கண்டித்து பா.ஜ.,-இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று ஆஞ்சநேயர் கோவில் முன், ஒரு லட்சத்து எட்டு வடை மாலை கட்டாயம் நடத்த வேண்டும் என, இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாநில செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள் கோவில் உதவி ஆணையரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து கோவில் முன் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்டியல் உடைத்து பணம் திருட்டு
வாழவந்திக்கோம்பை பஞ்., வெண்டாங்கியில், ஜோதி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள் புகுந்து பூட்டை உடைத்து, அங்கிருந்த உண்டியலை திறந்து ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் தர்மகர்த்தா தியாகராஜன் அளித்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
தொட்டிகிணறில் ரூ.௧.௯௫ கோடியில் பாலம்
வெள்ளித்திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், கொளத்துார் ரோட்டில், ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 31.70 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறுபாலம் மற்றும் கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணிக்கு நேற்று பூஜை நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பணிகளை துவக்கி வைத்தார்.
சென்னம்பட்டி அருகே முரளியில், ஜல் ஜீவன் திட்டத்தில், 16.5௦ லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி; கொமராயனுார் அருகில் தொட்டி கிணறு பகுதியில், ௧.௯௫ கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் மதன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
புதிய அரசாணை, 243 திரும்ப பெற வேண்டும். இரண்டு ஆண்டு வழங்காமல் உள்ள பதவி உயர்வை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். உயர்வி கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். எமிஸ் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் ஜெயராஜ், நிர்வாகி மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
அனைத்து தொழிற்சங்கம்
சார்பில் வாயிற் கூட்டம்
கரூர், திருமாநிலையூரில் உள்ள அரசு போக்கு வரத்து கழக கரூர் மண்டல அலுவலகம் முன், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., உதவி பொது செயலாளர் பாலசுப்பிரமணின் தலைமை வகித்தார். போக்குவரத்து கழகத்தில் வரவு செலவு வித்தியாசத்தை அரசு வழங்க வேண்டும், 15 வது ஊதிய பேச்சுவார்த்தை தொடங்கவும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஒப்பந்த பலன், பண பலன், மருத்துவ காப்பீடு, அகவிலைப்படி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் வேலை நிறுத்த போராட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.
கூட்டத்தில், டி.டி.எஸ்.எப்., மாநில துணை தலைவர் ஷாஜஷான், ஓய்வு பெற்றோர் நல பேரவை தலைவர் துரைராஜ், ஓய்வு பெற்றோர் நல சங்கம் நிர்வாகி கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
புகையிலை பொருள் விற்ற 5 பேர் கைது
ஈரோடு, முனிசிபல் சத்திரம் நேதாஜி சாலை, மைக்கேல் ராஜ் டீக்கடையில், சூரம்பட்டி போலீசார் நடத்திய சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் மைக்கேல் ராஜை, 53, கைது செய்தனர். இதேபோல் சூரம்பட்டி வலசு அணைகட்டு ரோடு ஐந்தாவது வீதி முருகன் மளிகை கடை உரிமையாளர் முருகநாதன், 40; ஈரோடு, பச்சபாளியில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ஜேம்ஸை, 56, தாலுகா போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, மரப்பாலம் நால்ரோடு அருகே பெட்டி கடையில், புகையிலை பொருட்கள் விற்றதாக, நுார்ஜகான், 70; சோலாரில் பெட்டிக்
கடையில் புகையிலை பொருட்கள் விற்ற மகேந்திரன், 53, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
* டி.என்.பாளையத்தில் மளிகை கடையில், புகையிலை பொருட்களை விற்றதாக, ரங்கநாதன், 52, என்பவரை, பங்களாபுதுார் போலீசார் கைது செய்தனர்.