ADDED : ஜன 25, 2024 10:29 AM
அரவக்குறிச்சியில் வாக்காளர்
தின விழிப்புணர்வு பேரணி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, அரவக்குறிச்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லுாரி மாணவ மாணவிகள், அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் உட்பட, 300-க்கும் மேற்பட்டோர், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக ஏவிஎம் கார்னர் பகுதி வரை சென்றது. தேர்தலுக்கான துணை தாசில்தார் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேகபாலீசுவரர் கோவிலில்
கண்ணப்ப நாயனாரின் குருபூஜை
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீசுவரர் கோவிலில் கண்ணப்ப நாயனாரின், 17ம் ஆண்டு குருபூஜை நடந்தது. இதனையொட்டி, புகழிமலை அடிவாரத்தில் இருந்து கண்ணப்ப நாயனார் ஊர்வலம் நடைபெற்றது. பின், பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீசுவரர் கோவில் சுவாமிக்கு, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
கண்ணப்ப நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அரவக்குறிச்சியில் இலவசகண் பரிசோதனை முகாம்
மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன், அரவக்குறிச்சி சி.எஸ். அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமை நாளை நடத்த உள்ளன. அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி பள்ளியில் நடைபெறும் முகாமில் கண்புரை நோயாளிகள், கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, துாரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள், முகாமில் கலந்து கொள்ள மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக நிலங்களை
அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்
நிலங்களை அளவீடு செய்ய, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை
நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவீடு செய்ய, வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய
வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பொதுமக்கள் நில அளவை செய்ய எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்
பட்டுள்ளது.
நில அளவை செய்யப்படும் தேதி, மனுதாரருக்கு எஸ்.எம்.எஸ்., அல்லது மொபைல் வாயிலாக தெரிவிக்கப்படும். நில அளவை செய்யப்பட்ட பின், மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
குளத்தில் வளர்ந்துள்ள
மரங்களை அகற்ற ஏலம்
குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அரியாறு பாசன பிரிவுக்கு சொந்தமான, கோவக்குளம் மற்றும் வலையல்காரன்புதுார் குளத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான பொது ஏலம், நடந்தது.
பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ., ஜோதி தலைமையில் நடந்தது. உதவி பொறியாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவக்குளம் குளத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்ற ஏலம் விடப்பட்டது. இதில், அதிகப்படியான தொகை, 99,510 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல், வலையல்காரன்புதுார் குளமும் ஏலம் விடப்பட்டது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கட்டுரை போட்டி
குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த கட்டுரை போட்டியில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கரூர் அரசு அருங்காட்சியகத்தில், குடியரசு தின விழாவை முன்னிட்டு கட்டுரை போட்டிகள் நடந்தன. இதில், என்னை கவர்ந்த விடுதலை போராட்ட தலைவர், உங்களுக்கு பிடித்த தமிழக விடுதலை போராட்ட தலைவர் ஆகிய தலைப்புகளில் கட்டுரை போட்டி நடந்தது. அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பினனர் பேச்சு போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இரவு நேரங்களில் மருத்துவர்கள்
இல்லாததால் நோயாளிகள் அவதி
அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில், இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் அவதிப்படுகின்றனர்.
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கே வருகின்றனர். பகல் நேரங்களில் சிறப்பான சேவை வழங்கி வரும் மருத்துவமனையில், இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இரவு, 12:00 மணிக்கு மேல் மருத்துவமனை சென்றால் செவிலியர்கள் உள்பக்கமாக கதவை பூட்டிவிட்டு, வெளியில் நிற்கும் நோயாளிகளை கண்டு கொள்வதில்லை.
ஒரு வேளை கதவை திறந்தாலும், அவசர சிகிச்சைக்காக வருவோரிடம் கரூருக்கு சென்று பார்த்துக் கொள்ளுமாறு செவிலியர்கள் கூறி விடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு, மருத்துவமனையில், 24 மணி நேரமும் மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டுமென அரவக்குறிச்சி சுற்று வட்டார மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லாலாப்பேட்டை ராஜ கணபதி
விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்சாயத்து லாலாப்பேட்டை கடைவீதி அருகில் மிகவும் பழமையான ராஜகணபதி விநாயகர் கோவில் உள்ளது. பழைய கட்டடம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் புதிதாக கோவில் கட்டடம் கட்டப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
நேற்று காலை காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து வரபட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. இதில் லாலாப்பேட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபி ேஷகம் விழா செய்யப்பட்டது.
தேசிய வாக்காளர் தினத்தை
ஒட்டி விழிப்புணர்வு பேரணி
கரூரில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கரூர் மாநகராட்சி, திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். இங்கிருந்து பேரணி பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, தின்னப்பா கார்னர் வழியாக ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்றடைந்தது.
பள்ளி மாணவ, -மாணவிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், தாசில்தார் வெங்கடேசன் உள்பட பலர்
பங்கேற்றனர்.
கோரக்குத்தி கிராமத்தில்
சுகாதார வளாகம் மோசம்
கோரக்குத்தி கிராமத்தில், சுகாதார வளாகம் பராமரிப்பின்றி படுமோசமான நிலையில் இருப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பஞ்., கோரக்குத்தி கிராமத்தில் கழிவறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் பராமரிப்பின்றி தண்ணீர் வசதி இல்லாமல் மேற்கூரை தகர சீட்டுகள் பெயர்ந்து கீழே சரிந்து கிடக்கின்றன. மேலும், கழிவறை கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.
இந்த கட்டடத்தை சுற்றி அதிகமான செடிகள் வளர்ந்து, புதர்மண்டி காணப்படுகிறது. எனவே, பஞ்., நிர்வாகம் இந்த சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநம்பி விபரீத முடிவு
குளித்தலை அடுத்த வதியம் பஞ்., கண்டியூர் பாம்பலாயி நகர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி, 37; கூலித்தொழிலாளி. இவரது மகள் தனலட்சுமி என்ற தீபன் தேவ், 21. திருநம்பி. இவர் கடந்த, 2 நாட்களுக்கு முன், தனது பாட்டி வீடான மேல சிந்தலவாடிக்கு சென்றுள்ளார். அங்கு மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு வீட்டின் கூறையில், தீபன்தேவ் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி
காப்பீடு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூரில் உள்ள, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் முன், காப்பீடு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மண்டல ஊழியர் சங்க நிர்வாகி ஸ்ரீவித்யா தலைமை வகித்தார். இந்திய பொருளாதார வளர்ச்சியில், மக்கள் சேவையில் பெரும் பங்காற்றி வரும், அரசு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும், குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நிர்வாகிகள் பழனிவேல், ராமமூர்த்தி, ராஜேந்திரன், முருகையா உள்பட பலர்
பங்கேற்றனர்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ரூ.4.33 கோடியில் நலத்திட்டம்
குளித்தலை அடுத்த இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்டி கிராமத்தில் கலெக்டரின் மக்கள் தொடர்பு திட்டம் நிறைவு நாள் விழாவிற்கு, கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தங்களது துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து விரிவாக பேசினர். தொடர்ந்து, முகாமில் பொது மக்களிடமிருந்து, 240 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், குளித்தலை ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் ஆகியோர்களிடம் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், 507 பயனாளிகளுக்கு, 4.33 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார். தொடர்ந்து, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பஞ்., தலைவர் ரம்யா சரவணன், யூனியன் கவுன்சிலர் சத்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குளித்தலை, தோகைமலை பள்ளியில்
கலைஞர் நுாற்றாண்டு விழா கருத்தரங்கம்
குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கருத்தரங்கம், சட்டசபை நாயகர் கலைஞர் விழா குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தங்கவேல் தலைமை
வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா வரவேற்றார். சட்டசபை பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, எம்.எல்.ஏ.,க்கள் குளித்தலை மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கருணாநிதியின் சிறப்புகள் குறித்து பேசினார். ஆர்.டி.ஓ., ரவி, தாசில்தார்கள் மகுடேஸ்வரர், முனிராஜ், மக்கள் பிரநிதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், தோகைமலை அரசு மேல் நிலைப்பள்ளியிலும் விழா நடைபெற்றது.
தென்னிந்திய அளவில் அறிவியல் கண்காட்சிக்கு
தேர்வாகியுள்ள பள்ளி மாணவருக்கு பாராட்டு
தென்னிந்திய அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்ள உள்ள அரசு பள்ளி மாணவருக்கு கலெக்டர் தங்கவேல் பாராட்டு தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் ராமன் 'குப்பை சேகரிக்கும் வாகனம் மூலம் மின்சாரம் தயாரித்தல்' என்ற அறிவியல் படைப்புக்காக கடலுாரில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் இடம் பெற்றார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் தென்னிந்திய அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளதற்கு வாழ்த்து பெற்றார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் அன்புமணி, உதவி இயக்குநர் காலல் கருணாகரன் உள்பட பங்கேற்றனர்.
'அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்'
''அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழில் கையொப்பமிட வேண்டும்,'' என, டி.ஆர்.ஓ., கண்ணன் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பயிலரங்கம் நடந்தது. இதில், டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளதால், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பமிட வேண்டும். அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள், கோப்புகள் அனைத்தும் தமிழிலேயே பராமரிக்கப்பட வேண்டும். இவற்றை அலுவலகங்களில் அலுவலர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து, பயிலரங்கில் பல்வேறு தலைப்புகளில் தனியார் கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவர் அழகர், ஓய்வு பெற்ற தாசில்தார் புகழேந்தி உள்பட பலர் பயிற்சியளித்தனர். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி உள்பட பலர் பங்கேற்றனர்.