ADDED : பிப் 15, 2024 11:45 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை
போக்சோவில் தொழிலாளி கைது
கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கட்டட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், ஜெகதாபி பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் முத்துசாமி, 23, கட்டட தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த, 16 வயதுள்ள பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கு கடந்த, 2023 ஜூலை முதல், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து, கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, கரூர் மகளிர் போலீசார் முத்துசாமியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தேசிய அளவிலான கிரிக்கெட்
அரவக்குறிச்சி மாணவர்கள் தேர்வு
சீனியர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியதால், தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாட இரு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், சீனியர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்ட அணியில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சூர்யா, முத்துக்குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள, தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இரு மாணவர்களும் தேர்வு பெற்றுள்ளனர்.
இரு மாணவர்களை, கல்லுாரி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
பாலப்பட்டி சாலையோரத்தில்
குழாய் விரிசலால் வீணாகும் நீர்
பாலப்பட்டி சாலையோரத்தில், குழாயில் விரிசல் ஏற்பட்டு காவிரி நீர் வீணாக சாலையோரம் பள்ளத்தில் தேங்கி வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் குழாய் வழியாக, கிராம பஞ்சாயத்துகளுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் நடக்கிறது. இந்நிலையில், பாலப்பட்டி சாலையோரத்தில் கடந்த சில வாரங்களாக, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் குழாயில் விரிசல் ஏற்பட்டு, அதிகமான தண்ணீர் வீணாகி சாலையோர பள்ளத்தில் தேங்கி வருகிறது. இதனால், குழாய் வழியாக செல்லும் தண்ணீர் குறைவாக செல்லும் நிலை உள்ளது. விரிசல் அடைந்துள்ள குழாயை சரி செய்ய, தேவையான நடவடிக்கையை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் எடுக்க வேண்டும்.
செயல்
அலுவலருக்கு
பிரிவுபசார விழா
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., செயல் அலுவலர் வேல்முருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றினார்.
நேற்று முன்தினம் மாலை பணியிடம் மாற்றமாக ஈரோடு மாவட்டம், கொல்லாங்கோவில் முதல் நிலை டவுன் பஞ்,,க்கு மாற்றம் செய்யப்பட்டார்.
நங்கவரம் டவுன் பஞ், சமுதாய கூடத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவிற்கு பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் செந்தில்வேலவன், லதா, செல்வகண்ணன், சங்கர், ராஜப்பா, ரவி மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பாராட்டி பேசினர். நகர தி.மு.க., செயலர் முத்து மற்றும் அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.
க.பரமத்தி அருகே 2 வீடுகளில்
தங்க நகை, பணம் திருட்டு
க.பரமத்தி அருகே, இரண்டு வீடுகளில் தங்க நகை திருட்டு போனது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி காட்டுமுன்னுார் பகுதியை சேர்ந்தவர் கபிலன், 31; இவர் கடந்த, 12ல், வீட்டை பூட்டி விட்டு, தோட்டத்துக்கு சென்று விட்டார். பிறகு, வீட்டுக்கு சென்ற போது, முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த எட்டே முக்கால் பவுன் தங்க நகை, சில்வர் கொலுசு ஒரு ஜோடி மற்றும், 7,000 ரூபாயை காணவில்லை. இதுகுறித்து, கபிலன் கொடுத்த புகார்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* க.பரமத்தி பி.காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, 59; இவர் கடந்த, 12ல், வீட்டை பூட்டி வீட்டு, தோட்டத்துக்கு மனைவியுடன் சென்று விட்டார். பிறகு, வீட்டுக்கு சென்று பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த நான்கரை பவுன் தங்க நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, மணி அளித்த புகார்படி, க.பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சட்ட விரோத மது விற்பனை
112 பாட்டில்கள் பறிமுதல்
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 112 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 112 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக
மும்மூர்த்தி, 45; குமார், 40; சுவாமிநாதன், 40; சிவானந்தம், 31; பாரதிராஜா, 29;
உள்பட, 17 பேரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க., பூத் கமிட்டி
ஆலோசனை கூட்டம்
அரவக்குறிச்சியில், அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட மேற்கு ஒன்றியம், கிழக்கு ஒன்றியம், அரவக்குறிச்சி நகரம், பள்ளப்பட்டி நகரம் உள்ளிட்ட பகுதிகளில், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகப்படியான ஓட்டுகளை பெற்று தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., சின்னச்சாமி,
அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலர் ஈஸ்வரமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலர் கலையரசன், அரவக்குறிச்சி நகர செயலர் இளமதி, பள்ளப்பட்டி நகர செயலர் சாதிக் அலி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மகிளிப்பட்டி கிராமத்தில்
காய்கறிகள் சாகுபடி பணி
மகிளிப்பட்டி கிராமத்தில், விவசாயிகள் பரவலாக காய்கறி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் விளை நிலங்களில் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதிகமாக வெண்டைக்காய், கத்திரிக்காய், மற்றும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறிகள் செடிகளுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்
படுகிறது.
தற்போது காய்கறிகள் வளர்ந்து வருகிறது. காய்கள் பறிக்கப்பட்டு உள்ளூர் வார சந்தையில் விற்கப்படுகிறது. மேலும், குறைந்த செலவில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மூலம் வருமானம் கிடைக்கிறது.
வெங்கடரமண சுவாமி
தெப்பத்திருவிழா நாளை தொடக்கம்
தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நாளை கொடியேற்றத்துடன்,
மாசிமக தெப்பத்திருவிழா தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத தேர்த்திருவிழா, தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு நேற்று சிறப்பு பூஜையுடன் விழாவுக்காக, பூர்வாங்க பணிகள் நடந்தது. இன்று வெள்ளி கருட சேவையில், மூலவர் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். நாளை காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
வரும், 22 திருக்கல்யாண உற்வசம், 24 தேர்த் திருவிழா, 26 தெப்பத்தேர் உற்சவம், 27, 29 ல் வெள்ளி கருடசேவை, வரும் மார்ச், 2 ல் ஆளும் பல்லாக்கு, 3 ல் ஊஞ்சல் உற்சவம், 4 ல் புஷ்பயாகம் ஆகிய நிகழச்சிகள் நடக்கிறது.
ஆடு திருடிய வாலிபர் கைது
வெள்ளியணை அருகே, ஆடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன், 70; விவசாயி. இவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்று கடந்த, 13ல் திருடு போனது. இதுகுறித்து, கருப்பண்ணன் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டை திருடியது வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரது மகன் சாரதி, 19, என தெரியவந்தது. பிறகு, சாரதியை வெள்ளியணை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
பொது நுாலகத்துறை சார்பில்
இளைஞர் இலக்கிய திருவிழா
கரூர் மாவட்ட பொது நுாலகத்துறை சார்பில், தனியார் கல்லுாரியில், காவிரி இளைஞர் இலக்கிய திருவிழா நடந்தது.
அதில், கல்லுாரி மாணவிகளுக்கு நுாலக உறுப்பினர் அட்டையை, டி.ஆர்.ஓ., கண்ணன் வழங்கினார். அதை தொடர்ந்து பேச்சு போட்டி, நுால் அறிமுகம், வினாடி-வினா, ைஹக்கூ உருவாக்க போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, திருச்சியில் நடைபெற உள்ள, காவிரி இலக்கிய விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பரிசு, சான்றுகளை வழங்க உள்ளார்.
விழாவில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், முன்னாள்
எம்.எல்.ஏ., மலையப்பசாமி, கல்லுாரி முதல்வர் சாருமதி, தமிழ் துறை தலைவர் ராசாம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
40ம் ஆண்டு பால் குடம் விழா
பக்தர்கள் நேர்த்திக்கடன்
குளித்தலை, பேராள குந்தாளம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி, 40ம் ஆண்டு பால்குடம் விழா நடந்தது.
குளித்தலை பஸ் ஸ்டாண்டு வளாகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பேராள குந்தாளம்மன் கோவில் உள்ளது. தேர் திருவிழாவையொட்டி, சுற்றுப்பகுதி மக்கள், பக்தர்கள் மேள தாளங்களுடன் கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பால்குடம், தீர்த்த குடம், அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக வந்து, பேராள குந்தாளம்மன் கோவிலில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பால்குட விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பஸ்சில் 5 பவுன் செயின்
பறித்த 4 பெண்கள் கைது
குளித்தலை அடுத்த, பொருந்தலுார் பஞ்., தெலுங்குபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்குமார் மனைவி கலைச்செல்வி, 21. நேற்று காலை, 9:45 மணியளவில் தெலுங்குபட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏறி, அரசு பஸ்சில் தோகைமலை பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார்.
அப்போது கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் செயினை ஒரு பெண் அறுத்துக் கொண்டு ஓடினார். கலைச்செல்வி கூச்சலிடவே பொதுமக்கள் பிடித்தனர்.
விசாரணையில் மொத்தம் நான்கு பெண்கள் வந்தது தெரியவந்தது. நான்கு பெண்களையும் சரமாரியாக மக்கள் தாக்கினர். பின், தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, ராஜகோபால் நகர், மந்திதோப்புவை சேர்ந்த பாண்டி மாணிக்கம் மனைவி அபிராமி, 30, அதே பகுதியை சேர்ந்த மணி மனைவி செல்வி, 28, பாபு மனைவி ஜோதி, 39, ராஜா மனைவி காளீஸ்வரி, 38, என தெரியவந்தது.
தோகைமலை போலீசார் விசாரித்து, நான்கு பெண்களையும் கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மந்த கதியில் நடக்கும் சாலை
பணியால் மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகிளிப்பட்டி முதல் உடையந்தோட்டம் வரை, தார்ச்சாலை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சாலை மோசமானதால், புதிய சாலை அமைக்க பணிகள் துவங்கப்பட்டது. அதன்படி, இரண்டு மாதங்களுக்கு முன்பு பழைய சாலை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. அதன் மேற்பரப்பில் கம்பி கற்கள் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்வதால், அவதிப்படுகின்றனர். எனவே, புதிய தார்ச்சாலை பணிகளை விரைந்து முடிக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூரில் இன்று கல்வி கடன் முகாம்
இன்று கல்வி கடன் முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இன்று (15ம் தேதி) காலை, 10:00 மணிக்கு மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து நடத்தும் கல்விக் கடன் முகாம் நடக்கிறது.
கல்விக் கடன் பற்றிய சந்தேகங்களுக்கும், ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யும் முறைகளையும் அறிந்து தெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அனைவரும் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.
இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா
குளித்தலை, பிப். 15-
குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் பூச்சோலைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
கடவூர் வட்டார கல்வி அலுவலர் செந்தமிழ்செல்வி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஞானபெப்ஸிபா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாமுனி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வேல்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடவூர் சரக வன அலுவலர்கள் கண்ணன், பெருமாள், கோதண்டராமன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. கணித பட்டதாரி ஆசிரியர் அற்புதம் நன்றி கூறினார்.
* முள்ளிப்பாடி பஞ்., நடுநிலைப்பள்ளியில், 64வது ஆண்டு விழா பஞ்.,தலைவர் நீலா தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேல்முருகன், ஊர் மணியகாரர் பெருமாள், முன்னாள் கவுன்சிலர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் புஷ்பராணி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கபடி, ஓட்டம், நீளம் தாண்டுதல், பேச்சுப்போட்டி, ஓவியம், கவிதை, திருக்குறள், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
குண்டும், குழியுமான சாலை
வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூர், பிப். 15-
கத்தாளபட்டியில், சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூரிலிருந்து, வெள்ளியணை வழியாக
திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், வெங்கக்கல்பட்டிஅருகில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு உள்ளது. இங்கிருந்து கத்தாளபட்டிக்கு தார்ச்சாலை செல்கிறது. இதன் வழியாக செல்லிபாளையம், கத்தாளபட்டி, கொங்குநகர், கற்பகம் நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் வாகனங்களில் சென்று
வருகின்றனர்.
தார்ச்சாலை போடப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதில் செல்வோர் சிரமப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் செல்லவே படாத பாடுபட வேண்டி உள்ளது. டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உடைந்த நிலையில் சின்டெக்ஸ் தொட்டி
கரூர், பிப். 15-
கரூர் மாநகராட்சி, 38 வது வார்டு கொளந்தானுார் அம்மன் நகரில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல ஆண்டுகளு க்கு முன், அந்த பகுதியில் போர் வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டார் வசதியு டன், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. அதில், அம்மன் நகர் பகுதியை சேர்ந்த, பொது மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், சின்டெக்ஸ் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. அப்பகுதியினர் புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். உடைந்த நிலையில் உள்ள, சின்டெக்ஸ் தொட்டியை மாற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்ன காமாட்சியம்மன் கோவில்
ஆண்டு விழா 26ல் தொடக்கம்
கரூர், பிப். 15-
அன்ன காமாட்சியம்மன் கோவில், 100 வது ஆண்டு திருவிழா வரும், 26 ல் தொடங்குகிறது.
கரூரில் பிரசித்தி பெற்ற, அன்ன காமாட்சியம்மன் கோவிலில் வரும், 26 மாலை, 4:00 மணிக்கு, 102 வது ஆண்டு விழா அமராவதி ஆற்றில் இருந்து, கரகம் பாலித்து வரும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இரவு, 8:00 மணிக்கு திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 27 ல் காலை, 9:00 மணிக்கு பூக்குழி இறங்குதல், 10:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம், 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம், இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, கரகாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 28 காலை, 11:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை பொங்கல், மாவிளக்கு பூஜை, இரவு, 8:00 மணிக்கு கரகம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு இன்னிசை பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.
கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணி
விளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை
கரூர், பிப். 15-
கரூர்-வாங்கல் இடையே சாலை விரிவாக்க பணி நடந்து முடிந்த லையில், போதிய மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர்-வாங்கல், நாமக்கல்-மோகனுார் பகுதிகளை இணைக்கும் வகையில், வாங்கலில் காவிரியாற்றின் குறுக்கே கடந்த, 2016 ல் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால், மோகனுாரில் இருந்து, கரூர் நகருக்கு நாள்தோறும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, மோகனுார் தினசரி சந்தைக்கு, விவசாயிகள் விளை
பொருட்களை எடுத்து செல்கின்றனர். இதனால், கரூர்-வாங்கல் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து கடந்த, 2020 ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, தொடங்கிய கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிகள், நிறைவு பெற்றது. இந்நிலையில், வாங்கல் சாலையில் போதிய மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்கிறவர்கள், தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, கரூர்-வாங்கல் சாலையில், போதிய மின் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணவரை தாக்கி கொலை செய்த
மனைவி, கள்ளக்காதலர்கள் கைது
குளித்தலை, பிப். 15-
தோகைமலையில், கூலி தொழிலாளியை அடித்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காலர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அடுத்த, கொசூர் பஞ்., குப்பமேட்டுப்பட்டி ஒத்த வீடு பகுதியை சேர்ந்தவர் ராசு, 47. இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி, 44. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராசு வீட்டின் அருகே வசித்து வரும் பொன்னம்பலம், 45, என்பவரும் மரம் வெட்டும் கூலி தொழில் செய்து வந்தார். இதேபோல் நாதிப்பட்டியை சேர்ந்த சின்னகாளை, 38, என்பவரும் மரம் வெட்டும் கூலி தொழில் செய்து வருகிறார்.
ராசு மனைவி வள்ளியிடம் பொன்னம்பலம், சின்னக்காளைக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, ராசு தனது வீட்டின் அருகே இருந்தபோது, அங்கு பொன்னம்பலம், சின்னகாளை ஆகியோர் வந்தனர். அப்போது, தனது மனைவியிடம் எப்படி கள்ளத்தனமாக பழகலாம் என்று இருவரிடமும் ராசு கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட பிரச்னையில் ராசுவை பொன்னம்பலம், சின்னகாளை மற்றும் ராசுவின் மனைவி வள்ளி ஆகியோர் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
தோகைமலை போலீசார் விசாரித்து, வள்ளி, பொன்னம்பலம், சின்னக்காளை ஆகியோரை கைது செய்தனர்.
மாவட்ட அளவிலான போட்டி
விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு
கரூர், பிப். 15-
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். பள்ளிகள், கல்லுாரி மற்றும் பொது பிரிவை சார்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். கபடி போட்டி ஆண்கள் பிரிவில், 12 அணிகளின் சார்பில், 144 வீரர்களும், பெண்கள் பிரிவில், 7 அணிகளின் சார்பில், 84 வீரர்களும் கலந்து கொண்டனர். கையுந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில், 10 அணிகள், பெண்கள் பிரிவில், 6 அணிகள் கலந்து கொண்டன. கால்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில், 8 அணிகளில் 144 வீரர்களும், பெண்கள் பிரிவில், 6 அணிகளில், 108 வீரர்களும் பங்கேற்றனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், விளையாட்டு மைதான மல்யுத்த பயிற்சியாளர் மெய்ஞான மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

