ADDED : பிப் 20, 2024 10:46 AM
கந்தன்குடி கிராமத்தில்
கொசு ஒழிப்பு பணி
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கந்தன்குடி கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
இதில் வீடுகளில் கழிவு நீர் தேங்காமல் இருக்க ஆலோசனை வழங்குதல், சுற்றுப்புறத்துாய்மை, நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர்
தொட்டி பராமரிப்பு பணி, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல், பழைய டயர்கள் அப்புறப்படுத்துதல், ஆகிய பணிகள் செய்யப்பட்டன.
கிருஷ்ணராயபுரம்
பகுதிகளில் மானாவாரி
கொள்ளு அறுவடை
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொள்ளு செடி அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், சரவணபுரம், குழந்தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, கோடங்கிப்பட்டி, சிவாயம், வடுகபட்டி, பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி விளை நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், கொள்ளு செடிகள் பசுமையாக வளர்ந்து பூக்கள் பூத்து காய்கள் பிடித்துள்ளது. தற்போது வெயில் அடிக்க துவங்கியதால், அறுவடை பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
சட்ட விரோத மது விற்பனை
360 பாட்டில்கள் பறிமுதல்
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 360 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 360 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக மணி, 51; ராமாயி, 54; வீரமலை, 48; முருகன், 31; மாரிமுத்து, 49; உள்பட, 26 பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்க
பள்ளியில் ஆண்டு விழா
அரவக்குறிச்சி அருகே உள்ள, கணக்குவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா மற்றும் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
ஆண்டு விழாவிற்கு புங்கம்பாடி கீழ் பாகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வேலுமணி வரவேற்றார். உதவி ஆசிரியர் ஜெயலட்சுமி பள்ளி ஆண்டு அறிக்கையை வாசித்தார். கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் துரைச்செல்வி மற்றும் உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர் பெருமாள்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்
துறை சார்பில் விழிப்புணர்வு
மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சுற்றுச் சூழல், கால நிலை மாற்றம் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி தலைமையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட முதன் மை கல்வி அலுவலர் சுமதி, வன அலுவலர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைதொடர்ந்து, நாட்டுபுற கலைஞர்கள் பங்கேற்ற பாரம்பரிய கிராமிய ஒயிலாட்டம், கரகம், பறையாட்டம், நாடகம் ஆகியவற்றின் மூலம், புதுப்பிக்கதக்க ஆற்றல், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து விழிப்
புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிறகு, கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி, முதல்வரின் பசுமை தோழர் கோபால், மாசு கட்டுபாடு வாரிய அலுவலர் வேல்முருகன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
பேராளகுந்தாலம் கோவில் விழா
ஐஸ்கட்டி அலங்காரத்தில் அம்மன்
குளித்தலையில், பேராள குந்தாலம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த, 7ல் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி பால் குடம் எடுத்து வருதல், சுவாமி திருவீதி உலா, இளநீர் பூஜை, கிடா வெட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குளித்தலை நகராட்சி பகுதி மற்றும் வைகைநல்லுார் பஞ்., பகுதியில் உள்ள கிராமங்களுக்கு துாக்குத்தேரில் சுவாமி திருவீதி உலா வந்தது.
அதனை தொடர்ந்து கிராம பூஜை, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. வாண வேடிக்கையுடன் சுவாமி குடி புகுந்து, திருவிழா முடிவடைந்தது. நேற்று முன்தினம், நேற்றும் அம்மனுக்கு ஐஸ் கட்டிகள் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. பக்தர்கள் பழம், மாவிளக்கு கொண்டு பூஜை செய்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அடிப்படை வசதி கோரி
அய்யக்கவுண்டன்பட்டி மக்கள் மனு
அடிப்படை வசதி கோரி, அய்யக்கவுண்டன்பட்டி கிராம மக்கள் கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் புழுதேரி பஞ்சாயத்தில், மூன்றாவது வார்டில் உள்ள அய்யக் கவுண்டன்பட்டியில் ஏராளமானவர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு, அடிப்படை வசதி கூட செய்து தரப்படவில்லை. குடிநீருக்காக, 5 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால், பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகனத்தில் செல்வது கடினமாக உள்ளது. இங்கு பஸ் வசதியில்லை என்பதால், பள்ளிக்கு மாணவர்கள் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இது குறித்து பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.
நாச்சார்பட்டியில் முருகன்
கோவில் கும்பாபிஷேக விழா
குளித்தலை அடுத்த, கீரனுார் பஞ்., நாச்சார்பட்டியில் முருகன் கோவில் வீடும், இடும்பன் சாமிக்கு தனியாக கோவிலும் உள்ளது. கோவில்களில் திருப்பணிகள் செய்து, கும்பாபி ேஷகம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த, 15ல் காலை காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின் முளைப்பாரி இடுவதற்கு சிறப்பு பூஜை செய்து, நவதானிங்கள் தெளித்தனர். அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் காவிரி நதியில் இருந்து தாரை தப்பட்டை முழங்க, வாணவேடிக்கையுடன் பால் குடம், தீர்த்தக் குடங்கள் அழைத்து வந்தனர். பின், முருகன் கோவில் வீட்டில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து முதல் நாள் யாகசாலை பூஜையில் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, தீப வழிபாடு நடைபெற்றது. இதேபோல் இரண்டாவது நாள் யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், நாடிசந்தானம், உயிர் ஊட்டல், கோ பூஜை, பிம்பசுத்தி, யாத்ராதானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது.
நேற்று காலை, 9:40 மணியளவில் முருகன் கோவில் வீடு மற்றும் இடும்பன் கோவிலுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பாப்பகாப்பட்டி கிராமத்தில்
குடிநீர் வினியோகம் பாதிப்பு
பாப்பகாப்பட்டி கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பாப்பகாப்பட்டி கிராமத்திற்கு, காவிரி குடிநீர் குழாய் மூலம் மக்களுக்கு வினியோகம் நடக்கிறது. கடந்த ஒரு வாரமாக, குழாய் வழியாக தண்ணீர் வரவில்லை.
இதனால் காவிரி குடிநீர் பிடிப்பதற்காக, இரும்பூதிப்பட்டி நெடுஞ்சாலை வழியாக சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாப்பகாப்பட்டி கிராமத்திற்கு, காவிரி குடிநீர் வினியோகம் தடையின்றி கிடைக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடுப்பாளையத்துக்கு மீண்டும் பஸ்
கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
நடுப்பாளையம் வரை மீண்டும் பஸ்சை இயக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் தான்தோன்றிமலை அருகில், ஏமூர் நடுப்பாளையம் வழியாக வெள்ளியணை வரை அரசு டவுன் பஸ் செல்கிறது. இந்த பஸ் தினமும், நடுப்பாளையம் வந்து சென்று வந்த நிலையில், தற்போது நடுப்பாளையம் கிழக்கு நால் ரோடு மாரியம்மன் கோவில் வழியாக சென்று விடுகிறது. நடுப்பாளையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேல், நடந்து சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது. பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், கூலி தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் நலன் கருதி, நடுப்பாளையம் வரை பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு விதிகளை மீறி செயல்படும்கல்குவாரிகளை மூட வேண்டும்
அரசு விதிகளை மீறி, செயல்படும் கல்குவாரிகளை மூட வேண்டும் என, கிருஷ்ணராயபுரம் நாம் தமிழர் கட்சி சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் கடவூர், தரகம்பட்டி, வள்ளியை, கே.பிச்சம்பட்டி, வரவணை, தேவர்மலை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில், அரசு அனுமதியில்லாமல் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுப்பது மட்டுமின்றி, பெரிய அளவில் வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் தொடர்ந்து மாசுபட்டு வருகிறது. இந்த பகுதிகளில், தேவாங்கு சரணலாயம் அமைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்குவாரிகளால், சரணலாயத்திற்கு பாதிப்பு வரலாம். இந்த கல்குவாரிகள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குழந்தையுடன் பெண் உள்பட 4 பேர் மாயம்
அம்மாபேட்டை, எஸ்.பி.குள்ளனுாரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பூங்கொடி, 33; இவரின் மகள் கவுசிகா ஸ்ரீ, 10; கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மூன்று மாதங்களுக்கு முன், சின்னியம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பண்ணாரி கோவிலுக்கு மகளுடன் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. தந்தை ரங்கசாமி புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார், தேடி வருகின்றனர்.
* திண்டல், காரப்பாறையை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சகுந்தலா, 70; மகன் மணி பராமரிப்பில் இருந்தார். மன நிலை சரியின்றி சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த, 15ம் தேதி திண்டல் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்து கிளம்பியவர் வீடு திரும்பவில்லை. மணி புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
* கோபி அருகே நல்ல தம்பி நகரை சேர்ந்தவர் அருந்ததி, 24; மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரின் தந்தை அன்பழகன் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
ஜிம்னாஸ்டிக் போட்டியில்
ஈரோடு மாணவர் சாதனை
ஜிம்னாஸ்டிக்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்தது. இதில், 18 மாநிலங்களில் இருந்து, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில் ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சிறப்பு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும், 11 மாணவர்கள் பங்கேற்றனர். சப்-ஜூனியர் பிரிவில் கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் சந்தானம் வெள்ளி பதக்கம், எட்டாம் வகுப்பு மாணவி ராகவி, ஏழாம் வகுப்பு மாணவி சஞ்சனா வெண்கல பதக்கம் வென்றனர்.

