/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இ.பி.எஸ்.,சுடன் கூட்டணி குறித்து கட்சிகள் பேசி வருகின்றன: 'மாஜி' அமைச்சர் தகவல்
/
இ.பி.எஸ்.,சுடன் கூட்டணி குறித்து கட்சிகள் பேசி வருகின்றன: 'மாஜி' அமைச்சர் தகவல்
இ.பி.எஸ்.,சுடன் கூட்டணி குறித்து கட்சிகள் பேசி வருகின்றன: 'மாஜி' அமைச்சர் தகவல்
இ.பி.எஸ்.,சுடன் கூட்டணி குறித்து கட்சிகள் பேசி வருகின்றன: 'மாஜி' அமைச்சர் தகவல்
ADDED : நவ 11, 2024 07:49 AM
கரூர்: ''சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சுடன், பல கட்சிகள் பேசி வருகின்றன,'' என, முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட, அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், அவைத்தலைவர் திருவிகா தலைமையில், நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், மாநில அ.தி.மு.க., தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி பேசியதாவது:கரூர் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆட்சி மாறும், வரும் போகும். ஆனால், பழிவாங்கும் எண்ணம் இருக்க கூடாது. பல ஜாம்பவான்களை உருவாக்கிய கட்சி, அ.தி.மு.க., 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, தமிழக வளர்ச்சிக்காக பாடுபட்ட இயக்கம், அ.தி.மு.க., இதனால், யார் கட்சியில் இருந்து போனாலும் கவலைப்பட வேண்டாம். எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை உருவாக்கிய போது, 17 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.
அதை, ஒன்றரை கோடியாக மாற்றி காட்டியவர் ஜெயலலிதா. தற்போது, இரண்டு கோடி உறுப்பினர்களாக, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உயர்த்தி உள்ளார். அ.தி.மு.க.,வுக்கு தோல்வி புதிது அல்ல. கடந்த, 1996ல் அ.தி.மு.க., தோற்றாலும், 1998, 1999ல் எம்.பி., தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றோம். பின் கடந்த, 2001ல் பலமான கூட்டணி அமைத்து, ஜெயலலிதா முதல்வர் ஆனார். 2006ல் தி.மு.க., ஆட்சி அமைத்தாலும் மைனாரிட்டி ஆட்சிதான். கடந்த, எம்.பி., தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. பிரதமர் மோடியா, ராகுலா என்ற பிரசாரம் தான், தமிழகத்தில் இருந்தது.இதனால், அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும். இ.பி.எஸ்., முதல்வர் ஆவார். சிறப்பான கூட்டணியை, இ.பி.எஸ்., அமைப்பார். வரும் சட்டசபை தேர்தலில், கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சுடன் பல கட்சிகள் பேசி வருகின்றன.கடந்த, எம்.பி., தேர்தல் தோல்வியை பற்றி கவலைப்பட வேண்டாம். அதில், தி.மு.க.,வுக்கு ஆறு சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளன. அ.தி.மு.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, 21 சத வீத ஓட்டுகளை பெற்றுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.,வை யார் வந்தாலும் அழிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் விஜயபாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் ஆலம் தங்கராஜ், நெடுஞ்செழியன், தானேஷ் முத்துக்குமார், பாலமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.