/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஓய்வூதியர்கள் முற்றுகை
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஓய்வூதியர்கள் முற்றுகை
ADDED : மே 04, 2024 07:10 AM
மோகனுார் : சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின், மேலாண் இயக்குனர் அலுவலகத்தை, முற்றுகையிட்டு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மோகனுாரில் பரபரப்பு ஏற்பட்டது.
மோகனுாரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில், கரும்பு அரவையின்போது, மூன்று சிப்ட் முறையில் தொழிலாளர்கள் பணியாற்றுவர். மற்ற காலங்களில், காலை, 8:00 முதல், மாலை, 5:00 மணி வரை பணியாற்றுவர். இங்கு பணியாற்றியவர்களில், 630 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய், அதிகபட்சம், 2,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது.
இது, அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம்.இந்நிலையில், உயர்ந்தபட்ச ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த, 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக உயர்ந்தபட்ச ஓய்வூதியம் பெற கணினி மூலம் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், ஆணையாளரை சந்தித்து புகாரளித்தனர்.
அதேபோல், டி.என்.பி.எல்., சேஷாய், ஆர்.எம்.எஸ்., பொன்னி சர்க்கரை ஆலை போன்ற நிறுவனங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு உயர்ந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்றவர்களுக்கும், உயர்ந்தபட்ச ஓய்வூதியம் வழங்க, சில ஆவணங்களை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இருந்து கேட்டுள்ளனர். அந்த ஆவணங்களை ஆலை நிர்வாகத்தினர் வழங்கவில்லை.
ஆலை நிர்வாகத்தின் இந்த மெத்தன போக்கை கண்டித்து, ஓய்வு பெற்றவர்கள், 150க்கும் மேற்பட்டோர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மேலாண் இயக்குனர் மல்லிகா, ஒரு வாரத்தில், உரிய ஆவணங்களை அனுப்பி, உயர்ந்தபட்ச ஓய்தியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.