sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 347 மனுக்கள் அளிப்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 347 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 347 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 347 மனுக்கள் அளிப்பு


ADDED : நவ 05, 2024 01:33 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்கள் குறைதீர் கூட்டம்

347 மனுக்கள் அளிப்பு

நாமக்கல், நவ. 5-

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 347 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த திவ்யா என்பவர், தையல் மிஷின் வேண்டி அளித்த மனுவின் அடிப்படையில், உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 6,690 ரூபாய் மதிப்பில் தையல் மிஷின், இரண்டு பேருக்கு விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, ஒருவருக்கு, 2,780 ரூபாய் மதிப்பில், காதொலி கருவி, மற்றொருவருக்கு, 730 ரூபாய் மதிப்பில், தாங்கு கட்டை வழங்கப்பட்டது. துணை கலெக்டர் பிரபாகரன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, ஆர்.டி.ஓ.,க்கள் பார்த்தீபன், சுகந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம்

விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைப்பு

நாமக்கல், நவ. 5-

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் - உழவர் நலத்துறை சார்பில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகனங்களை, கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: வேளாண் துறை சார்பில், 2024-25ம் ஆண்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை மற்றும் குதிரைவாலி ஆகியவற்றின் சாகுபடி தொழில் நுட்பங்கள், மருத்துவ பயன்கள், மதிப்பு கூட்டுதல் பற்றி, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரசார ஊர்தி, நேற்று துவங்கி, வரும், 9 வரை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 15 வட்டாரங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு வாகனங்கள் மூலம், நேற்று நாமக்கல், எருமப்பட்டி மற்றும் மோகனுாரிலும், இன்று மோகனுார், பரமத்தி, கபிலர்மலை, நாளை, திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், எலச்சிபாளையம், வரும், 7ல், எலச்சிபாளையம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், 8ல், கொல்லிமலை, மல்லசமுத்திரம், வெண்ணந்துார், 9ல், வெண்ணந்துார், ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

'கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தடை விதிக்கணும்'

ப.வேலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு

நாமக்கல், நவ. 5-

'எங்கள் வாழ்வாதாரம், விவசாயத்தை பாதுகாக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை தடை விதிக்க வேண்டும்' என, ப.வேலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர் தலைமையில், ப.வேலுார் தாலுகா, காமராஜர் நகர், நத்தமேடு, காக்காயன்தோட்டம், இருக்கூர், நொனாங்காடு கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மேற்கண்ட கிராமத்தில், விவசாயம் செய்தும், கால்நடைகள் வைத்தும் பிழைப்பு நடத்தி வருகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன், டி.ஆர்.ஓ., சுமன், இருக்கூர், மாணிக்கநத்தம் எல்லையில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு கல்லாங்குத்தில் அமைந்துள்ள பாறையை பார்வையிட்டு, பரமத்தி மற்றும் ப.வேலுார் டவுன் பஞ்., கழிவு

களை குழாய் மூலம் இந்த பாறை பகுதிக்கு கொண்டு வந்து, பள்ளத்தில் நிரப்பி சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக ஆய்வு செய்தார். அப்போது, 'பாறையின் சுற்றுப்பகுதியில் குடியிருப்பு, விவசாய கால்நடைகள் இருப்பதால், இது உகந்ததல்ல' என கூறி சென்றார். அதையடுத்து, கடந்த, 28ல், கனிமவளத்துறை அலுவலர்கள், பாறை பகுதியில், பாறையின் தன்மையை அறிய பார்வையிட்டு சென்றனர். மேற்படி பாறை பகுதியை சுற்றி, காமராஜர் நகர், நத்தமேடு, காக்காயன்தோட்டம், இருக்கூர், நொனாங்காடு ஆகிய, 5 கிராமங்கள் அமைந்துள்ளன. இதில், விவசாயம் செய்தும், கால்நடை வைத்தும் பிழைப்பு நடத்தி வருகிறோம்.இந்த பாறையை சுற்றி உள் நிலங்கள் அனைத்தும் விவசாய நிலங்களே. பாறையில் மழை காலங்களில் நீர் நிறைந்தால், அந்த நீர் எங்கள் விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் கிணற்றுக்கு ஊற்றுகளாக வந்து கொண்டிருந்தது. வறட்சி காலத்தில் இந்த ஊற்றுகளால் நாங்கள் பயனடைந்து வருகிறோம். இந்த பாறை பள்ளத்தில் கழிவுநீரை கொண்டுவந்து சேர்க்கும்போது, அந்த ஊற்று நீரினால், ஐந்து கிராமங்களில் விவசாயம் பாழடைந்தும், குடிநீரில் கழிவு நீர் கலந்தும், எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை எங்கள் பகுதியில் அமைக்க தடை விதித்து, எங்கள் விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அழியா இலங்கை அம்மன் கோவில் விழா

அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

ராசிபுரம், நவ. 5-

ராசிபுரம் யூனியன், கூனவேலம்பட்டி பஞ்.,ல் வரலாற்று சிறப்பு மிக்க அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் விழா, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மூன்றாவது வாரத்தில் நடப்பது வழக்கம். இந்தாண்டு பொங்கல் விழா, வரும், 7, 8ல் நடக்கிறது. முன்னேற்பாடு பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி துறையினர், வருவாய்துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் ஹரிஹரன் கலெக்டர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அழியா இலங்கை அம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும், 20 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், ஹிந்து சமய அறநிலையத்துறை, பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. மின்விளக்கு, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் பக்தர்களை தவிக்க விடுகின்றனர். அதேபோல், கும்பலை பயன்படுத்தி திருடர்களும் தங்களது கைவரிசையை காட்டி விடுகின்றனர். இதை தடுக்க காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருநாட்களில் பண்டிகை தொடங்க உள்ளதால் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிராமங்களில் கட்டுப்பாடு

அழியா இலங்கை அம்மன் கோவில் பொங்கல் விழா, இன்று அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சக்தி அழைத்தலுடன் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று முதல் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளில் அரிசி சாப்பாடு சமைக்க கூடாது; எண்ணெய் ஊற்றி தாளிப்பது, வேகவைப்பது, சுடுவது உள்ளிட்ட உணவுகளை தயாரிக்க கூடாது. இந்த கட்டுப்பாடு பல தலைமுறையாக பின்பற்றப்படுகிறது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய இந்த மூன்று நாட்கள் இந்தக்கட்டுப்பாடு தொடரும். பொங்கல் விழா முடிந்து வெள்ளிக்கிழமை வழக்கம்போல் உணவுகளை சமைக்கலாம். அம்மனை முழு விரதத்துடன் வணங்க வேண்டும் என்பதும், தாளிக்கும் சத்தம் கேட்டால் அம்மன் வீட்டிற்கு வர மாட்டார் என்பதும்

ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பாலத்தில் பாதுகாப்பு

வேலி அமைக்கப்படுமா?

பள்ளிப்பாளையம், நவ. 5-

பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதை தடுக்க, பாதுகாப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என, நாமக்கல் கலெக்டரிடம், கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே, புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலத்தில், பாதுகாப்பு சுவரின் உயரம் குறைவாக உள்ளது. எனவே, தற்கொலையை தடுக்கும் வகையில் பாலத்தின் பாதுகாப்பு சுவருக்கு மேலே, 5 அடிக்கு பாதுகாப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டிக்கிடக்கும் பெருமாள் கோவிலை திறக்க வலியுறுத்தல்

நாமக்கல், நவ. 5-

'பீமநாயக்கனுாரில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, பூட்டிக்கிடக்கும் பெருமாள் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கலம் தாலுகா, என்.புதுக்கோட்டை கிராமம், பீமநாயக்கனுாரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், பழமையான பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், கடந்த, 3 ஆண்டுகளாக மூடி கிடக்கிறது.இதற்கிடையே அனைத்து தரப்பு மக்களின் கருத்தை கேட்காமல், சேந்தமங்கலம் தாசில்தார் மற்றும் எருமப்பட்டி போலீஸ் எஸ்.ஐ., ஆகியோர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தாங்கள் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் மூலம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து தரப்பு மக்களின் நியாயத்தை கேட்டு, கோவிலை திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு

ப.வேலுார், நவ. 5--

ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச்சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்

படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.கடந்த வாரம், மரவள்ளி கிழங்கு டன் ஒன்று, 8,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது, டன் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வரை குறைந்து, 7,000 ரூபாய்க்கு விற்கிறது. அதேபோல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று, 9,500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, டன் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வரை குறைந்து, 8,500 ரூபாய்க்கு விற்கிறது. மரவள்ளிக்கிழங்கு விலை சரிவால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள்

கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us