ADDED : நவ 17, 2026 04:16 AM
கரூர்: தற்காலிகமாக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளை, பணி நிரந்தரம் செய்யக்கோரி, தேசிய பார்வையற்றோர் இணையம், கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி சுயமரியாதையுடன் வாழும் வகையில், தற்போதைய மாதாந்திர உதவித்தொகையான, 1,500லிருந்து, 5,000 ரூபாயக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்காலிக அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை கண்டறிந்து, சிறப்பு தேர்வு நடத்தி தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
