/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.16.24 கோடியில் குளங்கள் துார் வாரும் பணி
/
ரூ.16.24 கோடியில் குளங்கள் துார் வாரும் பணி
ADDED : ஜூன் 24, 2025 01:02 AM
கரூர், ''கரூர் மாவட்டத்தில், 2025--26ம் ஆண்டில், 248 குளங்கள், 16.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரப்படும்'' என, மாவட்ட ஜல்சக்தி அபியான் மத்திய பொறுப்பு அலுவலர் ரோஷன் தாமஸ் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நீர் ஆதாரங்கள் மேம்பாடு மற்றும் துார்வாரும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஜல்சக்தி அபியான் மத்திய பொறுப்பு அலுவலர் மற்றும் மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குனர் ரோஷன் தாமஸ் தலைமை வகித்து பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு, நீர் நிலைகளை மறு சீரமைத்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம், நீர் வளங்களை பாதுகாக்க முடியும். இதில், பொதுமக்களை ஈடுபடுத்துவதன் மூலம் நீரை திறம்பட சேமித்து, நீர் மேலாண்மையில் தற்சார்பு அடைய முடியும்.
இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். கடந்த, இரு ஆண்டுகளில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 80 புதிய சிறு குளங்கள், 4.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 2025--26ம் ஆண்டில், 248 குளங்கள், 16.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரப்படும்.
மேலும், பசுமையான கிராமங்களை உருவாக்கும் வகையில், 1,88,805 மரக்கன்றுகள், 20.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பட்டு பராமரிக்கப்படும். நீர்வள ஆதாரத்துறை சார்பில் காவிரி ஆற்றுப் பாதுகாப்பு கோட்டத்தில், 24 பணிகள், 4.31 கோடி ரூபாயில், 117.50 கி.மீ துாரம், அரியாறு வடிநிலை கோட்டத்தில், 7 பணிகள், 1.40 கோடி ரூபாயில், 13.50 கி.மீ., துாரம், கீழ்பவாணி கோட்டத்தில், 2 பணிகள், 15 லட்சம் ரூபாயில், 17 கி.மீ., துாரம் என மொத்தம், 33 பணிகள் 5.86 கோடி ரூபாயில், 148 கி.மீ., துாரம் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சண்முகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.