/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் கம்பம் மாற்றுவதில் சிக்கல் நீடிப்பு: ரயில்வே குகை வழிப்பாதை பணி இழுபறி
/
மின் கம்பம் மாற்றுவதில் சிக்கல் நீடிப்பு: ரயில்வே குகை வழிப்பாதை பணி இழுபறி
மின் கம்பம் மாற்றுவதில் சிக்கல் நீடிப்பு: ரயில்வே குகை வழிப்பாதை பணி இழுபறி
மின் கம்பம் மாற்றுவதில் சிக்கல் நீடிப்பு: ரயில்வே குகை வழிப்பாதை பணி இழுபறி
ADDED : நவ 10, 2024 01:26 AM
மின் கம்பம் மாற்றுவதில் சிக்கல் நீடிப்பு: ரயில்வே குகை வழிப்பாதை பணி இழுபறி
கரூர், நவ. 10-
ஏமூர் குகை வழிப்பாதையில், மின் கம்பம் மாற்றுவதில் சிக்கல் நீடித்து வருவதால், பணிகளை முடிப்பதில் இழுபறி காணப்படுகிறது.
கரூர் மாவட்டம், ஏமூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சீத்தப்பட்டி சாலையில், கரூர்-மதுரை ரயில்வே வழித்தடத்தில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்தது. அடிக்கடி இந்த வழித்தடத்தில் ரயில்களுக்காக ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவது வழக்கம். இதனால் சீத்தப்பட்டி சாலை வழியாக உப்பிடமங்கலம், நடுப்பாளையம், நடுப்பாளையம் காலனி, புலியூர், வெள்ளியணை, கத்தாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, ரயில்வே கேட் உள்ள இடத்தில் குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ரயில்வே கேட் அகற்றப்பட்டு, அங்கு குகை வழிப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் தொடங்கி இரு மாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திடீரென பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால், ஏமூர் -சீத்தப்பட்டி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், கரூர்--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குன்னனுார் பிரிவு வழியாக, 3 கி.மீ., தொலைவுக்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நடுப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் இருந்து, ஏமூர் பஞ்., அலுவலகம் அருகே செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளும் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான நிலையில் நாள்தோறும் கடந்து சென்று வந்தனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்தனர். பின், நடந்த பேச்சு வார்த்தையில் மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் உறுதி அளித்தது.
இந்நிலையில், இரண்டு மாதங்களாக பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், அந்த குகை வழிப்பாதை அமைக்கும் இடத்தில் இரண்டு மின் கம்பங்கள் உள்ளது. அதனை, சிறிது துாரம் தள்ளி மாற்ற வேண்டும் என பஞ்., தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கான செலவை தர வேண்டும் என, மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மின் கம்பங்கள் மாற்றுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
மின் கம்பம் மாற்றப்படாமல் இருப்பதால், அந்த இடங்களில் மட்டும் பணிகள் எஞ்சி உள்ளது. உடனடியாக மின் கம்பங்களை மாற்றி, மீதமுள்ள பணிகளை நிறைவு செய்து குகை வழிப்பாதையை, பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.