/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாசில்தாரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
/
தாசில்தாரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 12, 2025 01:22 AM
குளித்தலை, கடவூரில், கனிமங்கள் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும், 16ம் தேதி கரூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி கருப்பு சட்டை பேரணி நடத்தப்படும் என விவசாயிகள், பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இப்பிரச்னை குறித்து, நேற்று முன்தினம் மாலை கடவூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சவுந்தரவள்ளி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், கல்குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் கேட்டபோது, தாசில்தார் சவுந்தரவள்ளி விவசாயிகள், பொதுமக்கள் பிரதிநிதிகளை இங்கிருந்து வெளியே செல்லுங்கள்; போலீசாரை உடனே வர சொல்லுங்க என, மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இதையடுத்து, தாசில்தாரை கண்டித்து அவரது அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்க தலைவர் நாகராஜ், மாநில பொருளாளர் பழனிசாமி, மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சிந்தாமணிப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, டி.எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசியில் பேசினர்.
கனிமங்கள் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும், 16ல் -கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கருப்பு சட்டை பேரணி நடைபெறும் என தெரிவித்துவிட்டு, போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.