ADDED : நவ 08, 2026 06:25 AM

அரவக்குறிச்சி:கரூர்
மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகம் முன், நேற்று காலை, 7:00
மணிக்கு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க தலைவர்
அன்னக்கொடி தலைமையில், 40 துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், கடந்தாண்டு வழங்கிய தீபாவளி
போனஸைவிட, நடப்பாண்டு கூடுதலாக வழங்க வேண்டும் எனக்கூறி, கோஷம்
எழுப்பினர். நேற்று, பள்ளப்பட்டி நகராட்சிக்கு விடுமுறை என்பதால்,
போராட்ட குழுவினரின் கோரிக்கைக்கு செவி சாய்க்க கூட ஆள் இல்லாமல், மாலை
வரை வெயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் ஆனந்தகுமார் கூறியதாவது:
ஒப்பந்த
துாய்மை பணியாளர்கள், 40 பேர், கடந்தாண்டு வழங்கிய தீபாவளி போனசை விட
நடப்பாண்டு கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் எனக்கூறினார்.
ஆனால், துாய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்தத்தை எடுத்திருந்த
கே.வி., நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவு பெற்றதால் போனஸ் வழங்க
முடியவில்லை. இந்நிலையில், கே.வி., நிறுவனத்திடம் போனஸ் குறித்து
கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தற்போது, 1,000 ரூபாய் போனஸ்
வழங்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை
பணியாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படாது. தீபாவளி பண்டிகை
முடிந்தவுடன் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
