/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலை காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
/
தோகைமலை காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
தோகைமலை காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
தோகைமலை காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
ADDED : ஜூலை 17, 2025 01:39 AM
குளித்தலை, தோகைமலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காசநோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. காசநோய் பிரிவு துணை இயக்குனர் சரவணன் தலைமை வகித்து, ஆலோசனை வழங்கினார். தோகைமலை வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, காசநோய் பிரிவு துணை இயக்குனர் சரவணன் பேசியதாவது:
நுரையீரலில் ஏற்படும் நுண்ணுயிர் தொற்று, கண்ட இடத்தில் எச்சில் துப்புவதால் காசநோய் கிருமிகள் காற்றில் கலந்து, மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது. காசநோயானது, பொதுவாக மூச்சு தொகுதியில் நுரையீரலை தாக்கி நோயை உண்டாக்கினாலும், இவை நரம்பு தொகுதி, நிணநீர் தொகுதி, இரைப்பை குடல் தொகுதி, எலும்பு மூட்டுகள், குருதி சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் ஆகிய பல பகுதிகளிலும் நோயை உண்டாக்கி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, பொதுமக்கள், காசநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள சத்தான சிறுதானிய உணவு, காய்கறி, பழங்கள் ஆகியவற்றை தொடர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின், மதுரை பெஞ்ச் மார்க் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், காசநோய் மருந்து உட்கொள்ளும், 100 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
அரசு மருத்துவ அலுவலர்கள், பி.பி.எம்., ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.