/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆரியூர் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் வலியுறுத்தல்
/
ஆரியூர் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆரியூர் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆரியூர் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 18, 2024 12:42 PM
கரூர்: ஆரியூரில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரத்தை தலைமை இடமாக கொண்டு, க.பரமத்தி, புன்னம், காசிபாளையம், கார்வழி, விசுவநாதபுரி, தும்பிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் கீழ் ஆரியூர் உள்ளிட்ட 22 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரியூர், குஞ்சாம்பட்டி, நல்லிசெல்லிபாளையம், சின்னமுத்தாம்பாளையம், வெங்கிடாபுரம், பருத்திக்காட்டுப்பாளையம், ஜல்லிபட்டி, நிமிந்தப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 2,500க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலும் விவசாய கூலி மற்றும் டெக்ஸ்டைல்ஸ், கோழிப்பண்ணை கூலித்தொழிலாளர் களாக பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்க்கு சிகிச்சை பெற 8 கி.மீ., தூரத்தில் உள்ள க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது 7 கி.மீ., தொலைவில் உள்ள காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நோய் அவதியுடன் செல்ல வேண்டியுள்ளதாக நோயாளிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் இருந்து க.பரமத்தி அல்லது காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்று வர உரிய பஸ் வசதி இல்லை. அதுவும் பகலில் மட்டும் க.பரமத்திக்கு இரண்டு முறை வந்து செல்லும் தனியார் டவுன் பஸ்ஸை நம்பி செல்ல முடிவதில்லை. அது மட்டுமல்லாது அங்கு க.பரமத்தி சுற்று வட்டார பகுதி மக்கள் பலரும் வருவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும், காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல நினைத்தால், அங்கு செல்ல பஸ்வசதியே கிடையாது. முதியோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்குள் ஒருநாள் செலவாகி விடுவதாகவும், இரவில் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும் போது கார்களில் அழைத்து செல்ல அதிக வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி ஆரியூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.