/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் அருகே புதிய வடிகால் பாலம் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள்
/
மாயனுார் அருகே புதிய வடிகால் பாலம் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள்
மாயனுார் அருகே புதிய வடிகால் பாலம் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள்
மாயனுார் அருகே புதிய வடிகால் பாலம் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : அக் 03, 2025 01:55 AM
கரூர், கரூர் மாவட்டம், மாயனுார்- கட்டளை பகுதிகளை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் கரையோர பகுதியில், கும்பகுழி என்ற இடத்தில் கடந்த, 1924ல் ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில், வடிகால் கழிவுநீர் பாலம் கட்டப்பட்டது.
அதன்மூலம், கட்டளை முதல் மாயனுார் வரை பொதுமக்கள் வாகனங்களில் சென்று வந்தனர். மேலும், வலது பகுதியில், விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் ஆகியவை, வடிகால் வாய்க்கால் மூலம் காவிரியாற்றில் கலக்கும்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு கட்டளை மேட்டுவாய்க்கால் உள்பட, நான்கு கிளை வாய்க்கால்களுக்கு, காவிரியாற்றில் இருந்து தாமாகவே தண்ணீர் செல்லும் வகையில், சிறிய தடுப்பணை அமைக்கப்பட்டது. கடந்த, 2013 ல் மாயனுார் கதவணை கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்த பிறகு, காவிரியாற்றில் அதிகப்படியான தண்ணீர் செல்லும் போது, கும்ப குழியில் உள்ள வடிகால் வாய்க்காலுக்கு, திரும்ப தண்ணீர் சென்றதால், விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், காவிரியாற்றில் இருந்து, கும்ப குழி வடிகால் வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாத வகையில் ஷட்டர் மூலம் தடை செய்யப்பட்டது. ஆனால், வடிகால் வாய்க்காலின் மேல்பகுதியில் உள்ள பாலத்தை, பொதுமக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், 2023ல் வடிகால் கழிவுநீர் பாலத்தின், ஒரு பகுதி சரிந்தது. இதையடுத்து, கட்டளை-மாயனுார் சாலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு பாலம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.
அதன் வழியாக, மீண்டும் மாயனுாரில் இருந்து கட்டளை, ரங்கநாதபுரம், மேலமாயனுார் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு, பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் சேதமடையும் வாய்ப்புள்ளதால், கும்பகுழியில் புதிதாக பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.