ADDED : ஜன 18, 2025 12:34 AM

கரூர்:கோவையில் இருந்து, கரூர் வழியாக நேற்று காலை, 11:45 மணிக்கு, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், தான்தோன்றிமலை - வெள்ளியணை இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே, ரயில் இன்ஜின் முன்பக்கத்தில் சத்தம் கேட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த ரயில் டிரைவர், ரயிலை வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி விட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே ஆய்வு செய்தனர்.
அப்போது, ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சிறிது சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது.
பின்னர், தண்டவாளத்தின் மேல்பகுதி சரி செய்யப்பட்டது. வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்ட, எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்று இன்ஜின் இணைக்கப்பட்டு, நேற்று மதியம், 1:00 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தண்டவாளத்தில் இரும்பு துண்டு, கம்பி வைத்தால், இதுபோன்ற சேதம் ஏற்படும். தொடர் விடுமுறை காரணமாக, சிறுவர்கள் வைத்த இரும்பு துண்டுகளால், தண்டவாளம் சேதம் அடைந்ததா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என, தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு தெரிவித்தனர்.