/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்மேற்கு பருவமழை தொடர்பாக ஆலோசனை
/
தென்மேற்கு பருவமழை தொடர்பாக ஆலோசனை
ADDED : மே 20, 2025 07:25 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் வருவாய் துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பாதிப்படையக்கூடும் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள, 76 பகுதிகளுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் சம்மந்தப்பட்ட துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதனை ஆய்வு செய்தும், மேலும் நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட வேண்டியிருப்பின் அது குறித்தான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும், 04324 -256306 என்ற தொலைபேசி எண்ணிலும் பேரிடர் தொடர்பான தகவல்களை அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். கூட்டத்தில் குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.