ADDED : ஜூன் 03, 2026 04:08 AM
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில் இருந்து, ஜவுளி பூங்காவுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்,
பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் ஜவுளி பூங்கா பகுதியில் இயங்கி வரும் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். தினமும், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பகுதியில் இருந்து ஜவுளி பூங்காவுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் காலை நேரங்களில் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் நெரிசல் காணப்படுகிறது.குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால், தொழிலாளர்கள் பஸ்களில் ஏற முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சிலர் காலதாமதமாக பணியிடங்களுக்கு செல்வதால், வேலை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அதேபோல், மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் நேரங்களில், பஸ் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், பஸ் படிக்கட்டுகளில் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.எனவே, பள்ளப்பட்டி பகுதியில் இருந்து ஜவுளி பூங்காவுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
