ADDED : ஜூன் 03, 2026 04:08 AM

கரூர்:கரூரில் உள்ள, 'அம்மா' உணவகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த, 2011ல் மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில், தமிழகம் முழுவதும், 'அம்மா' உணவகங்களை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். கொரோனா காலக்கட்டத்தில், 'அம்மா' உணவகம் மூலம், மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டது. இது தமிழக மக்களிடையே, பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், பல 'அம்மா' உணவகங்கள் மீது தாக்குதல் நடந்தது. ஜெயலலிதா படங்கள் துாக்கி எறியப்பட்டன. இந்த சம்பவங்கள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால், 'அம்மா' உணவகங்களை மூடும் மனநிலையில் இருந்த, தி.மு.க., பின் வாங்கியது.மாநிலம் முழுவதும் பெயரளவில், 'அம்மா' உணவகங்கள் செயல்பட்டன. கரூரில் உழவர் சந்தை மற்றும் கரூர் அரசு பழைய மருத்துவமனையில், 'அம்மா' உணவகங்கள் செயல்பட்டன. அதில், காந்தி கிராமத்துக்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மாற்றப்பட்டது. இதனால், பழைய அரசு மருத்துவமனையில் இருந்த, 'அம்மா' உணவகம் மூடப்பட்டது. கரூரில் உழவர்சந்தை அருகே, 'அம்மா' உணவகம் பெயரளவில் நடந்து வருகிறது.இந்நிலையில், த.வெ.க., ஆட்சிக்கு வந்தவுடன், 'அம்மா' உணவகங்களை சீரமைக்கவும், தேவையான பொருட்களை வாங்க வேண்டும் எனவும், முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கரூர் உழவர் சந்தை அருகே செயல்படும், 'அம்மா' உணவகம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. கடந்த, 2021 சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் நன்னடத்தை விதிகளால், 'அம்மா' உணவகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மறைக்கப்பட்டது. அந்த நிலையே தற்போதும் நீடிக்கிறது. 'அம்மா' உணவகத்தின், முகப்பும் சேதமடைந்துள்ளது. முதல்வர் விஜய் உத்தரவுக்கு பிறகும், அதை பொருட்படுத்தாமல், கரூரில், 'அம்மா' உணவகம் ஏனோ தானோ என்ற நிலையில் செயல்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.எனவே, கரூர் உழவர் சந்தை அருகே செயல்படும், 'அம்மா' உணவகத்தை சீரமைத்து தரமான உணவை வழங்க, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
