ADDED : ஜூலை 08, 2026 05:20 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ள, அரசு கலைக்கல்லூரிக்கு செல்ல கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
அரசு கல்லுாரியில், 15க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புக்கான பிரிவுகள் உள்ளன. தற்போது முதலாம் ஆண்டு சேர்க்கை முடிந்து, கல்லுாரி தொடங்கியதால், பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர் செல்கின்றனர். காலை மற்றும் மதியம் என இரு நேரங்களில் கூடுதலாக பஸ் வசதி செய்து கொடுத்தால், கல்லுாரிக்கு சென்று வர ஏதுவாக அமையும்.
கூடுதல் பஸ் வசதி இல்லாததால், கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் வளையப்பட்டி, பஞ்சப்பட்டி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களில், கூட்ட நெரிசலுடன் பொதுமக்களுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர் நலன் கருதி, கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
