மின் தடையால் இயங்காத சிக்னல் நிரந்தர தீர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
மின் தடையால் இயங்காத சிக்னல் நிரந்தர தீர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : செப் 28, 2026 06:39 AM

கரூர்,:கரூர்
நகரில் மின் தடை ஏற்படும் போது, தானியங்கி சிக்னல்கள்
செயல்படாததால், கரூர் நகரப்பகுதிகளில் கடும் போக்குவரத்து
நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை சாலை,
திருச்சி சாலை, ஜவஹர் பஜார் சாலை, தின்னப்பா கார்னர் சாலைகள் பிரியும்
இடத்தில், மனோகரா கார்னில் நான்கு பகுதிகளிலும், தானியங்கி
சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளது. தானியங்கி சிக்னல்கள் செயல்பட மின்
இணைப்புகளும் உள்ளது. இந்நிலையில், கரூர் நகரில் மின் தடை ஏற்படும்
போதும், பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும்
போதும், சிக்னல்கள் செயல்படுவது இல்லை.
அப்போது, வாகன ஓட்டிகள்
தாறுமாறாக செல்வதால், கரூர் மனோகரா கார்னர் பகுதியில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும்
அவதிப்படுகின்றனர். மேலும், கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து
வெளியேறும் பஸ்களும், திருகாம்புலியூர் வழியாக கோவை, திருப்பூர்,
ஈரோடு, நாமக்கல், சேலம் பகுதியில் இருந்து கரூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு
வந்த பஸ்களும் மனோகரா கார்னர் பகுதியில் நெரிசலில் சிக்கி
கொள்கிறது.
இதனால், கரூர் நகரப்பகுதியில் ஏற்படும் கடும்
போக்குவரத்து நெரிசலை, சமாளிக்க முடியாமல், போக்குவரத்து
போலீசார் திணறுகின்றனர். எனவே, கரூர் நகர பகுதியில் உள்ள தானியங்கி,
சிக்னல்களை, 24 மணி நேரமும், செயல்படும் வகையில் யு.பி.எஸ்., வசதி
செய்து தர, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
