ADDED : மார் 31, 2024 03:56 AM
பணம், தங்க காசு திருட்டு
கரூர்: கரூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டில் இருந்து, மூன்று லட்ச ரூபாய் மற்றும் தங்க காசுகளை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
கரூர் மாவட்டம், ஏமூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 57. இவர் கடந்த, 8ல் மனோகரா கார்னர் பகுதியில் உள்ள, நகை கடை முன், டி.வி.எஸ்., ஆசஸ் மொபட்டை நிறுத்தி, சீட் பெட்டியில், மூன்று லட்ச ரூபாய், ஒரு பவுன் மதிப்புள்ள இரண்டு தங்க காசுகளை வைத்து விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, மொபட்டின் சீட் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த, பணம் மற்றும் தங்க காசுகளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, முருகேசன் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
மது பதுக்கி விற்றவர் கைது
அரவக்குறிச்சி: தளவாபாளையம் பகுதியில், மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் தளவாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இப்பகுதியை சேர்ந்த சண்முகம், 52, என்பவர் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரிய வந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 1,000 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக, மது பாட்டில்களை பதுக்கி விற்ற
சண்முகம் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
ஈரோடு தொகுதியில்
௩௧ வேட்பாளர்கள் போட்டி
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள், ஏழு லட்சத்து, 15 ஆயிரத்து 617. பெண் வாக்காளர்கள் ஏழு லட்சத்து, 46 ஆயிரத்து 355. மூன்றாம் பாலினத்தவர் 104 பேர். மொத்தம், 14 லட்சத்து, 62 ஆயிரத்து 76 பேர் உள்ளனர். இவர்களுக்காக, 1,688 ஓட்டுசாவடிகள் உள்ளன. கடந்த, 20ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. 27ல் நிறைவு பெற்றது.
மொத்தம், 44 பேர் மனு செய்திருந்தனர். பரிசீலனைக்கு பின், 37 மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள். ஆறு பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால், 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில்லாமல் நோட்டாவும் உண்டு. இறுதி வேட்பாளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, நேற்றிரவு, 10:30 மணி வரை வெளியிடவில்லை. விபரம் கேட்டபோது, பட்டியல் சரிபார்ப்பு பணி நடப்பதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

