/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி வரை பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
/
பள்ளி வரை பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 24, 2025 01:28 AM
அரவக்குறிச்சி, மாணவர்கள் பள்ளிக்கு 1 கி.மீ., நடந்து செல்லும் நிலை உள்ளதால், பஸ்களை நிறுத்தம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவக்குறிச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. அரவக்குறிச்சியில் இருந்து பாளையம் செல்லும் வழியில், 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து அரவக்குறிச்சிக்கு தினமும் மாணவ மாணவியர், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வந்து செல்கின்றனர். காலை 8:00 மணிக்கு முன் அரசு பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் பஸ்களிலேயே பெரும்பாலும் மாணவ மாணவியர், அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர்.
தனியார் பஸ் அரவக்குறிச்சியில் உள்ள, புங்கம் பாடி வளைவு பகுதி யிலேயே மாணவ மாணவியரை இறக்கிவிட்டு செல்கின்றனர். இங்கிருந்து பள்ளிக்கு செல்ல, 1 கி.மீ.,க்கு மேல் தொலைவு உள்ளதால் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே அரவக்குறிச்சி நிறுத்தம் வரை, பஸ் சென்று வந்தால் பள்ளிக்கு அருகிலேயே மாணவர்களை இறக்கி விட்டு செல்லலாம். எனவே பாளையத்திலிருந்து காலை, மாலை வேளைகளில் இயக்கப்படும் பஸ்களை பஸ் நிறுத்தம் வரை இயக்க வேண்டும் என பயணிகள், மாணவ மாணவியர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.