/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை தீயணைப்பு நிலையம் திடீர் மாற்றம்
/
குளித்தலை தீயணைப்பு நிலையம் திடீர் மாற்றம்
ADDED : நவ 19, 2025 03:45 AM
குளித்தலை குளித்தலை சட்டசபை தொகுதியில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, குளித்தலையில் புதிதாக தீயணைப்பு நிலையம் தொடங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து கடந்த அக்., 11ல் குளித்தலை பெரியபாலம் பரிசல் துறை அருகே, அ.தி.மு.க., முன்னாள் நகராட்சி தலைவர் ராணிமணிசேகருக்கு சொந்தமான இடத்தில், தீயணைப்பு நிலையத்தை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைக்க
உள்ளதாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
புதிதாக திறக்கப்படும் இடம் அ.தி.மு.க., பிரமுகருக்கு சொந்தமானது என்பதால் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், தீயணைப்பு நிலைய திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதையடுத்து, புதிய தீயணைப்பு நிலையத்தை திருச்சி மண்டல தீயணைப்பு நிலைய அலுவலர், குளித்தலை டி.எஸ்.பி.. ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிலையில் ஆளும் கட்சியினர், புதிதாக திறக்கப்பட்ட தீயணைப்பு நிலையம் உள்ள இடம் அ.தி.மு.க., பிரமுகருக்கு சொந்தமானது என்பதால், அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற
வேண்டுமென முடிவு செய்து, சப் -கலெக்டர் அலுவலகத்தில், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாத வருவாய்த்துறைக்கு சொந்தமான, ஓட்டு கொட்டகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டது.
இங்கிருந்து தீயணைப்பு வாகனம் வெளியே செல்லும் போது, பல்வேறு பணி சம்பந்தமாக வரும் மக்களின் வாகனங்கள், அரசு பணியாளர்களின் வாகனங்கள் பாதையிலேயே நிறுத்தப்படுவதால் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த இடத்தில் அடிப்படை வசதிகள் கிடையாது. தீயணைப்பு நிலைய வாகனம், எந்த இடையூறும் இல்லாமல் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

