/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி கிடப்பில் போடப்பட்ட காவிரி உபரி நீர் திட்டம்
/
வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி கிடப்பில் போடப்பட்ட காவிரி உபரி நீர் திட்டம்
வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி கிடப்பில் போடப்பட்ட காவிரி உபரி நீர் திட்டம்
வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி கிடப்பில் போடப்பட்ட காவிரி உபரி நீர் திட்டம்
ADDED : ஜன 20, 2024 09:51 AM
கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே கடந்த, 19 ஆண்டுகளாக பஞ்சப்பட்டி ஏரி வறண்டு கிடக்கிறது. காவிரியாற்றில் இருந்து, உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு செல்லும் திட்டம் கிடப்பில் உள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியன், பஞ்சப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஏரியில், 198.80 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்க முடியும். கடவூர் மற்றும் சுற்றியுள்ள மலை பகுதிகள், பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர்வரத்து பகுதிகளாக இருந்தது. காலப்போக்கில் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, கடவூர் மலைப்பகுதியில் மழை குறைவு காரணமாக, பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் வரத்து அடியோடு நின்றது. 2005ல் மாநிலம் முழுவதும் பெய்த பெருமழை காரணமாக பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வந்தது. அதன் பிறகு இன்று வரை, ஏரிக்கு சரி வர தண்ணீர் வராமல், 100 ஏக்கர் ஏரி வறண்ட நிலையில் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பஞ்சப்பட்டி ஏரிக்கு வரும் தண்ணீர் மூலம், 14.53 ெஹக்டேர் நிலத்தில் பாசனம் செய்யப்பட்டது. ஏரி நிரம்பும் போது, கரைக்கு பாதிப்பு இல்லாமல் தண்ணீரை வெளியேற்ற, இரண்டு இடங்களில் வாய்க்கால்கள் உள்ளது. பஞ்சப்பட்டியில் இருந்து வெளியேறும் உபரி நீர், குளித்தலை வழியாக திருச்சி மாவட்டம், குடமுருட்டி பகுதியில் காவிரியாற்றில் கலக்கிறது.
கடந்த, 19 ஆண்டுகளாக ஏரிக்கு சரிவர தண்ணீர் வராததால், விவசாயிகள் மாற்று திட்டத்தை அரசுக்கு முன் வைத்தனர். அதுதான், மாயனுார் காவிரியாற்றில், வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை, பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு வர வேண்டும் என்பதாகும். ஆனால், அதிகாரிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கமால் கிடப்பில் போட்டுள்ளனர்.
காவிரியாற்றின் உபரி நீர், பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு வந்தால், 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். குடிநீருக்கு பஞ்சம் இருக்காது. காமராஜர் முதல்வராக இருந்த போது, பஞ்சப்பட்டி ஏரிக்கு உபரி நீரை கொண்டு வர ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு, அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் அதிகாரிகளோ, பஞ்சப்பட்டி ஏரி, காவிரியாற்றை விட நிலப் பரப்பில் உயரமாக இருப்பதால், தண்ணீரை கொண்டு செல்ல முடியாது என, கூறுகின்றனர். கால்வாய் வெட்டி கொண்டு வர வாய்ப்பு இல்லையென்றால், ராட்சத குழாய்கள் மூலம் காவிரியாற்றில் இருந்து உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு வர வேண்டும். 2018 ஆகஸ்ட் மாதம், காவிரியாற்றில் விநாடிக்கு, இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது.
அதை தொடர்ந்து கடந்த, மூன்று ஆண்டுகளாக காவிரியாற்றில் இருந்து, உபரி நீர் கடலில் கலக்கிறது. குழாய்கள் மூலம் அந்த தண்ணீரை, பஞ்சப்பட்டி ஏரிக்கு திருப்பி விட்டு இருந்தால், தற்போது ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, பஞ்சப்பட்டி ஏரியின் கரைப்பகுதிகளும், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியும் சீரமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏரிக்கு காவிரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் இவ்வாறு கூறினர்.