/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழை நின்றதால் கோரைப்புல் அறுவடை மீண்டும் துவக்கம்
/
மழை நின்றதால் கோரைப்புல் அறுவடை மீண்டும் துவக்கம்
ADDED : ஜன 08, 2025 06:43 AM
கரூர்: கரூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை நின்றுள்ளதால், கோரைப்புல் அறுவடை மீண்டும் துவங்கியுள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய துவங்கிய போது, கரூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால், கோரை அறுவடை பாதிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் வாங்கல், பிச்சம்பாளையம், கடம்பங்குறிச்சி, தளவாய்பாளையம், தோட்டக்குறிச்சி, நெரூர், மரவாப்பாளையம், புதுப்பாளையம், திருமாகூடலுார், அச்சமாபுரம், சோமூர், வேலாயுதம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோரை பயிர், 25,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கோரை மூலம், பாய்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், கான்கிரீட் அமைக்கவும், திரை சீலை, நாற்காலிகள் செய்யவும் கோரைப்புல் பயன்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, பாய் உற்பத்தி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரூர் வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கோரைப்புல் அறுவடை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால், கோரை புல் அறுவடையில் விவசாயிகள் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் அருகே, நெரூரை சேர்ந்த கோரை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எதிர்பார்த்ததை போல கோரை பாய்க்கு அதிக ஆர்டர் கிடைத்தது. மின்வெட்டும் இல்லாததால், பாய் உற்பத்தி தொடங்கியது. இதனால், கோரை புல்லுக்கு அதிக விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த நவ.,20க்கு பிறகு கரூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், அறுவடை செய்த கோரை புல்லை காயவைக்க முடியவில்லை. மேலும், அறுவடை செய்த கோரையை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது. கலர் மாறி விடும். இதனால், சில பகுதிகளில் அறுவடை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.பொங்கல் பண்டிகைக்காக பாய் உற்பத்தி துவங்கிய நிலையில், கோரைப்புல் அறுவடை நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக, மழை சற்று ஓய்ந்துள்ளதால், நெரூர் உள்ளிட்ட பகுதிகளில் கோரை அறுவடை மீண்டும் துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக, 16 இன்ச் கொண்ட கோரைப்புல் ஒரு கட்டு, 1,200 ரூபாய் வரை விலை போகிறது. இவ்வாறு கூறினர்.