ADDED : நவ 24, 2026 04:41 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த ஆர்.டி. மலை பஞ்., மேல புதுப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ், 52. இவர் பாத்திரக்கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் தனது ஊரில் உறவினர் இறந்து விட்டதால், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், வேகமாக மோதுவது போல் வந்தனர்.
இப்படி வேகமாக வரலாமா என தர்மராஜ் கேட்டபோது, மூவரும் அப்படித்தான் வருவோம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள், சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மதியம், 3:50 மணியளவில் ஆர்.டி.மலை மேலப்பட்டி சாலையில், தர்மராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த, மூன்று பேரில் ஒருவர், அரிவாளுடன் சென்று என்கிட்டயே வம்பு இழுக்கிறாயா என கேட்டதுடன், தோள்பட்டை, முழங்கை பகுதியில் வெட்டி ரத்தக்காயம் ஏற்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட தர்மராஜ், தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளார். அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் குறித்து, தோகமைலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
