UPDATED : ஜன 10, 2024 12:41 PM
ADDED : ஜன 10, 2024 11:43 AM
தெரு விளக்குகள் எரிய
நடவடிக்கை தேவை
கரூர் அருகே காந்தி கிராமம் பகுதியில், பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் எரிவது இல்லை. பலமுறை அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் திண்டாடுகின்றனர். மேலும், தெரு நாய்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் பீதியில் உள்ளனர். காந்தி கிராமம் பகுதியில் தெரு விளக்குகளை, எரிய வைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுகிய பாலத்தை சரி செய்ய
மக்கள் வலியுறுத்தல்
கரூர் அருகே, கோம்புபாளையம் பஞ்சாயத்து, முனிநாதபுரத்தில் புகளூர் வாய்க்கால் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள், காவிரியாறு மற்றும் புகளூர் வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாயிகள், விளை பொருட்ளை எடுத்து செல்கின்றனர். ஆனால், பாலம் குறுகியதாக உள்ளதால், விளை பொருட்களை விவசாயிகளால் எடுத்து செல்ல முடியவில்லை. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால், புகளூர் அருகே வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள, பாலத்தை விரிவுப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கழிவு நீர் வாய்க்காலை
துார்வார வேண்டுகோள்
கரூரில், வெங்கமேடு பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கழிவு நீர் வாய்க்காலில், செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும், மழை பெய்யும் போது கழிவு நீர், சாலையில் செல்லும் நிலை ஏற்படும். இதனால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க, வெங்கமேடு பகுதியில் செல்லும், கழிவு நீர் வாய்க்காலை துார்வாரி தேங்கியுள்ள கழிவு
பொருட்களை அகற்ற வேண்டும்.

