/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம்
/
வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED : மார் 01, 2023 06:13 AM
குளித்தலை : தோகைமலை அருகே வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி - கரூர் மாவட்ட எல்லையில் தோகைமலை அருகே உள்ள வீரப்பூர் கிராமத்தில் பெரியகாண்டியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் பொன்னர், சங்கர், மகாமுனி, தங்காள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய சந்நிதிகள் உள்ளன. வீரப்பூர் கோவிலில் மகா சிவராத்திரி, படுகளம், வேடபரி, திருத்தேர் வடம் பிடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் பங்கேற்க, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த ஆண்டு மாசி திருவிழா, கடந்த பிப்., 18ம் தேதி, மகா சிவராத்திரி அன்று தொடங்கியது. தொடர்ந்து 20ல் கொடியேற்ற நிகழ்ச்சியும், 26ல் படுகளம் திருவிழாவும், நேற்று முன்தினம் வேடபரி, குதிரை தேர் திருவிழாவும், நேற்று மதியம் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில், கோவில் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள், தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை திருத்தேரின் சக்கரத்தில் கொட்டியும், ஆடு, கோழி, பன்றி
வெட்டியும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கரூர், குளித்தலை, தோகைமலை, தரகம்பட்டி மற்றும் திருச்சி, திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.