/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் தேங்கும் தண்ணீர்; போர்வெல் மூலம் விற்பனை: அதிகாரிகள் 'கொர்'
/
மாயனுார் கதவணையில் தேங்கும் தண்ணீர்; போர்வெல் மூலம் விற்பனை: அதிகாரிகள் 'கொர்'
மாயனுார் கதவணையில் தேங்கும் தண்ணீர்; போர்வெல் மூலம் விற்பனை: அதிகாரிகள் 'கொர்'
மாயனுார் கதவணையில் தேங்கும் தண்ணீர்; போர்வெல் மூலம் விற்பனை: அதிகாரிகள் 'கொர்'
ADDED : ஜன 16, 2025 07:10 AM
கரூர்: கரூர் அருகே மாயனுார் கதவணையில், தேக்கி வைக்கப்படும் தண்ணீரை, நிலத்தடி மூலம் தனியார் எடுத்து லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், போர்வெல்கள், விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மாயனுார் காவிரியாற்று பகுதியில், 254 கோடி ரூபாய் செலவில் கதவணை கட்டப்பட்டுள்ளது. அதில், 1 டி.எம்.சி., தண்ணீர் வரை தேக்கி வைக்க முடியும். மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர், அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், திருமுக்கூடலுார் பகுதியில் இணைந்து, மாயனுார் கதவணைக்கு செல்கிறது. இதனால், மாயனுார் கதவணையில் இருந்து, கட்டளை பகுதி வரை, காவிரியாற்று பகுதி கடல் போல் காட்சியளிக்கும். மாயனுார் கதவணையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, கட்டளை காவிரியாற்று பகுதியில், கரூர் மாநகராட்சி, உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்து மற்றும் திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் பகுதி உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மாயனுார் முதல் கட்டளை வரை, தனியார் நிலங்களில் போர்வெல் அமைத்து, தண்ணீரை உறிஞ்சி டிராக்டர், லாரிகள் மூலம் சிலர் விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து, மாயனுார், கட்டளை பகுதி விவசாயிகள் கூறியதாவது:மேட்டூர் அணை, அமராவதி அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளது. சாகுபடி பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மாயனுார் கதவணைக்கு வரும், தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்துள்ளது. அதை வைத்துதான், குடிநீர் மற்றும் பயிர்களுக்கு, உயிர் தண்ணீராக பயன்படுத்த உள்ளோம்.
மாயனுார் தடுப்பணையில், தேங்கும் தண்ணீர் மூலம் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயரும். ஆனால், தனியார் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்கள் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது. அதை தவிர, நேரடியாக காவிரியாற்றில் மின் மோட்டார் மூலம், தண்ணீரை விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர். இதனால், தனியார் நிலங்களில் தண்ணீர் விற்பனைக்காக, அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களை அகற்ற வேண்டும். வரும் கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அரசு துறை அதிகாரிகள் தண்ணீர் திருட்டை கண்காணித்து தடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

