/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமையுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
/
கரூரில் பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமையுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
கரூரில் பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமையுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
கரூரில் பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமையுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 01, 2024 01:26 AM
கரூரில் பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமையுமா?
தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
கரூர், நவ. 1-
கரூரில், பஸ்களுக்கு பாடி கட்ட அரசு சார்பில் தனி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா, என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக, தமிழகத்தில் கரூரில், 70க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு பாடி கட்டும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு பஸ்சுக்கு பாடி கட்ட, 20 முதல், 25 நாட்கள் ஆகும். 40 முதல், 50 தொழிலாளர்கள் வரை, ஒரு பஸ்சுக்கு பாடி கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூரில், 10 முதல், 15 பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள்தான் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள நிறுவனங்கள், மூன்று முதல் ஐந்தாண்டுகள் வாடகை ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது. குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகு, உபகரணங்களை வேறு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், பஸ் பாடி கட்ட தேவையான உபகரணங்கள் கர்நாடகா மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இதனால், கூடுதல் செலவும் நேரமும் ஆகிறது. மாறாக, கரூரில் பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமைக்கப்பட்டால், மூலப்பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் வர வாய்ப்புண்டு.
பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமைக்கப்படும் பட்சத்தில், சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு இல்லாததால், விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பும் வராது. இதனால், கரூரில் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:
கரூரில் செயல்பட்டு வரும், பஸ் பாடி கட்டும் நிறுவனங்களில், நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். பஸ் பாடி கட்டும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்தில் வேலை இல்லாத போது, தொலை தூரம் உள்ள வேறு பஸ் பாடி கட்டும் நிறுவனத்தை தேடி செல்லும் நிலை உள்ளது. பூங்கா அமைக்கப்படும் பட்சத்தில், ஒரு நிறுவனத்தில் வேலை இல்லாத பட்சத்தில், அருகில் உள்ள வேறு நிறுவனத்துக்கு தொழிலாளர்கள் செல்ல முடியும். ஒரு குடையின் கீழ் பல பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் செயல்படுவதால், அதிக தரம் கொண்ட வகையில் பாடி கட்டும் பணிகள் இருக்கும்.
கரூரில் உள்ள பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில், தனியார் பஸ்களுக்கு மட்டுமல்ல, அரசு பஸ்களுக்கும் பாடி கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும், கரூர் அருகே மண்மங்கலத்தில் அரசு பஸ் பாடி கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பூங்கா அமைக்கும் பட்சத்தில், இன்னும் கூடுதலாக பஸ்களுக்கு பாடி கட்ட வாய்ப்பு ஏற்படும். இதனால், தொழிலாளர்களுக்கும் அதிகளவில் வேலை கிடைக்கும். பஸ் பாடி கட்ட பூங்கா அமைக்க, கரூர் புறநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் அதிகம் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.