/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மா சாகுபடியில் நோய் தாக்குதலைகட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி
/
மா சாகுபடியில் நோய் தாக்குதலைகட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி
மா சாகுபடியில் நோய் தாக்குதலைகட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி
மா சாகுபடியில் நோய் தாக்குதலைகட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜன 19, 2025 02:00 AM
மா சாகுபடியில் நோய் தாக்குதலைகட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது மா மரங்கள் பராமரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், அரசு சார்பில் உரிய பயிற்சிகள் அளிக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பையூர் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய வல்லுனர்கள் அடங்கிய குழுவை, அமைத்து உத்தரவிட்டார்.
இக்குழுவினர் போச்சம்பள்ளி பகுதியிலுள்ள மகாதேவகொல்லஹள்ளி, வெப்பாலம்பட்டி, பாரண்டப்பள்ளி, காட்டாகரம், தாதம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலுள்ள மாந்தோட்டங்களை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மா மரங்களை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன் அல்லது வால்பேன், தத்துப்பூச்சி ஆகியவற்றின் தாக்கத்தினால் மா மரங்களில் உள்ள பூக்கள் கருகி காணப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மாவில், தத்துப்பூச்சி மற்றும் வால்பேனை கட்டுப்படுத்த, மா மரங்களில் முற்றிலும் கருகிய பூக்களை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். வேப்பம் புண்ணாக்கு, 100 கிலோ ஒரு ஏக்கருக்கு அல்லது மரத்திற்கு, 2 கிலோ என்ற அளவில் இட்டு இலைப்பேன் கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். நீலவண்ண ஒட்டுபொறி, 20-30 எண்ணிக்கை ஒரு ஏக்கருக்கு அமைத்து, வால்பேனை கவர்ந்து கட்டுப்படுத்தலாம். தத்துப்பூச்சி மற்றும் வால்பேன் சேதம் குறைவாக உள்ள இடத்தில், வேப்பம் கொட்டைச்சாறு, 5 சதவீதம், வேப்ப எண்ணெய், 2 மி.லி., ஒரு லிட்டருக்கு, புங்கம் எண்ணெய், 3 மி.லி., ஒரு லிட்டருக்கு அல்லது பெவேரியாபேசியானா,
4 கிலோ ஒரு லிட்டருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.மா மரத்தில் தத்துப்பூச்சி மற்றும் வால்பேன் அதிகமாக காணும் பட்சத்தில் பூச்சிக்கொல்லிகளான ஸ்பைனட்ராம், 1.0 மி.லி., ஒரு லிட்டருக்கு, பிப்ரோனில், 1.5 மி.லி., ஒரு லிட்டருக்கு, டோல்பென் பைராய்டு, 1.5 மி.லி., ஒரு லிட்டருக்கு என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மா பூக்கள் உதிர்வதை கட்டுப்படுத்த என்.ஏ.ஏ., 0.2 மில்லி, ஒரு லிட்டருக்கு மற்றும் ஐ.ஐ.எச்.ஆர்., மேங்கோ ஸ்பெசல் என்ற நுண்ணுாட்ட கலவை, 5 கிராம், ஒரு லிட்டருக்கு என்ற அளவில் தெளித்து பூக்கள் உதிர்வதை தடுத்து மகசூலை அதிகரிக்கலாம்.
எனவே, மா விவசாயிகள் மேற்காணும் வழிமுறைகளை பின்பற்றி, மாவில் நோய், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி பயன்பெறலாம்' என்றனர்.

