/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் மாநில அளவிலான கேரம், வாள்சண்டை போட்டி
/
ஓசூரில் மாநில அளவிலான கேரம், வாள்சண்டை போட்டி
ADDED : ஜன 29, 2025 01:06 AM
ஓசூர் : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பாரதியார் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி, மாநில அளவிலான வாள்சண்டை மற்றும் கேரம் விளையாட்டு போட்டிகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று துவங்கியது. 38 மாவட்டங்கள் மற்றும் சென்னை, நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவியர் என மொத்தம், 1,400 பேர் வாள்சண்டை போட்டியிலும், 350 பேர் கேரம் விளையாட்டிலும் பங்கேற்றுள்ளனர். கே.ஏ.பி., திருமண மண்டபத்தில் கேரம் போட்டிகளும், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் வாள்சண்டை போட்டிகளும் நடக்கின்றன. நேற்று மற்றும் இன்று (ஜன., 29) என இரு நாட்கள், 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவியருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதேபோல், நாளை (ஜன., 30) மற்றும் நாளை மறுநாள் (ஜன., 31) என இரு நாட்கள், மாணவர்களுக்கு கேரம் மற்றும் வாள்சண்டை போட்டிகள் நடக்கின்றன. இதிலும், 1,750 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். நேற்று துவங்கிய மாநில அளவிலான போட்டிகளை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படுகின்றன. பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி
உட்பட பலர் பங்கேற்றனர்.