/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்திய பட்ஜெட் கருத்துதேசிய உற்பத்தி இயக்கம் அறிவிப்புக்கு வரவேற்பு
/
மத்திய பட்ஜெட் கருத்துதேசிய உற்பத்தி இயக்கம் அறிவிப்புக்கு வரவேற்பு
மத்திய பட்ஜெட் கருத்துதேசிய உற்பத்தி இயக்கம் அறிவிப்புக்கு வரவேற்பு
மத்திய பட்ஜெட் கருத்துதேசிய உற்பத்தி இயக்கம் அறிவிப்புக்கு வரவேற்பு
ADDED : பிப் 02, 2025 01:21 AM
மத்திய பட்ஜெட் கருத்துதேசிய உற்பத்தி இயக்கம் அறிவிப்புக்கு வரவேற்பு
கிருஷ்ணகிரி : மத்திய அரசின், 2025 - -2026ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து, தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், வியாபாரிகள், தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினர், தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
எஸ்.மூர்த்தி, 58, தலைவர், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் (ஹோஸ்டியா) சங்கம்: வாடகைக்கான டி.டி.எஸ்., பிடித்தம், 6 லட்சமாக உயர்வு, பேட்டரிக்கான சுங்கவரி குறைப்பு, 5 ஆண்டுகளில், 5 லட்சம் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம், 500 கோடியில், ஏ.ஐ., தொழில்நுட்ப மையம், புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க, 10,000 கோடியில் திட்டம், புத்தாக்க நிறுவனங்களுக்கு வட்டி சலுகை, சிறு தொழில்கள் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய உற்பத்தி இயக்கம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால், ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 28ல் இருந்து, 18 சதவீதமாக குறைக்க வேண்டும். என்.பி.ஏ., கணக்கை, 90 நாட்களில் இருந்து, 180 நாட்களாக அதிகரிக்க வேண்டும். சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் இல்லை.
கே.மகேஷ், 51, மாவட்ட தலைவர், சிறு, குறு கிரானைட் உற்பத்தியாளர்கள் சங்கம், கிருஷ்ணகிரி: மத்திய பட்ஜெட் நடுத்தர மற்றும் தொழில் வர்க்கத்தினருக்கு சாதகமாக உள்ளது. 10 கோடி ரூபாய் வரை இயந்திரங்கள் வாங்க சூரிட்டி தேவையில்லை என்பது வரவேற்கத்தக்கது. குறு தொழில்கள் செய்வோருக்கென தனி சலுகைகள், ஜி.எஸ்.டி., வரி குறைப்பு, உள்ளிட்ட சலுகைகள் இல்லாதது வருத்தம். நலிவடைந்த தொழில் குறித்து, கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்பது ஆரோக்கியமானது.
கே.எம். ராமகவுண்டர், 65, மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம், கிருஷ்ணகிரி: 2 சதவீதம் கூட இல்லாத உயர்சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு அளித்த சலுகைகள் கூட, 80 சதவீதமுள்ள விவசாயிகளுக்கு இல்லை. விதை, மானியம், இலவச மின்சாரம் என்பவை, மாநில அரசு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி குறித்த அறிவிப்பு இல்லை. இதற்கான நடவடிக்கையை எடுத்தால் விவசாயி பெறும் கடன்களாவது குறையும். தொழில் முனைவோருக்கு, 27 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாய கடன்கள் குறித்தும் பேசாதது வருத்தமளிக்கிறது.
கே.வேல்முருகன், 50, சிறு, குறுந்தொழிற்சாலை உரிமையாளர்: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, கடன் உத்தரவாத நிதி திட்டத்தில், கடன் வரம்பு அளவு, 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், குறு நிறுவனங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை கடன் அட்டை வசதி செய்யப்படும் என அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தனியாருக்கு பெரிய நிறுவனங்கள் குறு நிறுவனங்களிடமிருந்து, 5 சதவீதமும், சிறு நிறுவனங்களிடமிருந்து, 15 சதவீதமும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைத்தும், அதற்கான அறிவிப்பு வராதது ஏமாற்றம்.
பா.சண்முகம், 28, விவசாயி, அதகபாடி: விவசாயிகளுக்கு கிஷான் கிரிடிட் கார்டு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம், 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த அறிவிப்பு, என்னை போல் உள்ள இளம் தலைமுறை விவசாயிகள் பயன் பெறவும் விவசாயத்தில் புது வகையான தொழில்நுட்பம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும்.
ச.நரேஷ், 29, தனியார் உணவு டெலிவரி ஊழியர், தர்மபுரி: உணவு டெலிவரி நிறுவனங்களில் வேலை செய்யும் தனியார் ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த சம்பளத்தில் நேரத்திற்கு உணவு வினியோகம் செய்ய வேண்டிய கட்டாயமுள்ள எங்கள் உயிருக்கு, பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. இந்த இன்சூரன்ஸ் திட்டம் எங்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை தருவதாக உள்ளது. மேலும், டெலிவரி ஊழியர்களுக்கு மின்னணு பதிவு அடையாள அட்டை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
யு.விஸ்வநாதன், 37, தனியார் நிறுவனர் ஊழியர், காரிமங்கலம்: ஆண்டு வருமானம், 12 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை என்ற அறிவிப்பு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பயனுள்ளதாக அமையும். லாஜிஸ்டிக் மையமாக மாற்றமடையும் இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவில் லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். பட்டியல் மற்றும் பழங்குடியின பெண்கள், 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன், அடுத்த, 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை தொடங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது.
ஜெ.பிரதாபன், 52, மாநில செயலாளர், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், லளிகம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்திற்கு, 2.74 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க, தமிழ்மாநில விவசாய தொழிலாள சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால், அத்துறைக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு இல்லாதது கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் ராணுவ தொழிற்சாலை அமைக்கப்படும் என கடந்த, 10 ஆண்டுகளாக எதிர்பார்த்து இருந்தனர். அந்த அறிவிப்பும் இல்லை. விவசாய தொழிலாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்.
ஏ.டி.திருமலை, தலைவர், அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம்: விவசாய நடவு முதல், அறுவடை வரை வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கான மானியம் உயர்த்தப்படவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை படி வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் குறிப்பிடப்படவில்லை. கரும்புக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் விவசாயிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்.