/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நேரடி கொள்முதல் நிலையங்களில் ராகியை விற்கலாம்
/
நேரடி கொள்முதல் நிலையங்களில் ராகியை விற்கலாம்
ADDED : ஜன 23, 2025 01:44 AM
ஓசூர்,: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் இருந்து ராகி கொள்முதல் செய்ய, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால், ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவிலுள்ள சிறு, குறு விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் சாகுபடி செய்த ராகியை, பாகலுார், பேரிகை தொட்ட வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், போடிச்சிப்பள்ளி மற்றும் மதகொண்டப்பள்ளி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் விற்பனை செய்யலாம்.
நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை, 9:30 முதல், மதியம், 1:30 மணி வரையும், மதியம், 2:30 முதல், மாலை, 6:30 மணி வரையும் செயல்படும். சிறு, குறு விவசாயிகள் வி.ஏ.ஓ.,க்களிடம் பெற்ற சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புக் மற்றும் ஆதார் நகலுடன், ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்.
ராகியை கல், மண் மற்றும் துாசி நீக்கம் செய்து தரம் பிரித்து கொண்டு வர வேண்டும். அரசு நிர்ணயம் செய்த படி, ராகி குவிண்டால் (100 கிலோ) ஒன்றுக்கு, 4,290 ரூபாய் என கொள்முதல் செய்யப்படும். அதற்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நேரடி ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறித்து, தகவல் தெரிவிக்க விரும்பினால், கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக எண்ணான, 04343 - 235421 என்ற எண்ணிலோ அல்லது சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக எண்ணான, 044 - 26422448 என்ற எண்ணிலோ, சென்னை விழிப்பு பணி அலுவலக எண்ணான, 044 - 26424560 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.