/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஜன 24, 2025 01:37 AM
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
கிருஷ்ணகிரி, :  கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குணவதி தலைமை வகித்தார்.
போராட்டத்தில், 3,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு துறையில் பணி நியமனம் செய்வதை தடை செய்து, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறை படுத்த வேண்டும். சத்துணவு திட்டத்தில், 10 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தவர்களை பணி மூப்பு அடிப்படையில் அரசின் பிற துறைகளில் பணியமர்த்த வேண்டும். அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை, 60 லிருந்து, 62ஆக உயர்த்த வேண்டும். கருணை அடிப்படையில் ஆண் வாரிசுக்கும் பணி வழங்க வேண்டும்.
மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல், சத்துணவு ஊழியர்களுக்கும், 12 மாதங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட செயலாளர்கள் முருகம்மாள், வெண்ணிலா, முன்னாள் மாநில செயலாளர் ஜெயந்தி ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

