/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மராஜா கோவிலில் அர்ச்சுணன் தபசு நாடகம்
/
தர்மராஜா கோவிலில் அர்ச்சுணன் தபசு நாடகம்
ADDED : ஏப் 16, 2025 01:01 AM
தர்மராஜா கோவிலில் அர்ச்சுணன் தபசு நாடகம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பழையபேட்டை தர்மராஜா கோவிலில், அக்னி வசந்த மகோற்சவ திருவிழா கடந்த, 2ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் பகலில், பாகவதர் கோவிந்தராஜின் மகாபாரத விரிவுரையும், பொன்னுசாமியின் இன்னிசை கவிவாசிப்பும் நடந்து வருகிறது. மேலும், திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தின்னக்கழனி திருப்பதி நாடக சபா சார்பில், கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பும் திரவுபதி கல்யாணம், உள்ளிட்ட பல்வேறு இதிகாச மகாபாரத தெருக்கூத்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இதன் முக்கிய நிகழ்வான அர்ச்சுணன் தபசு நாடகம் நேற்று காலை நடந்தது. கவுரவர்களை கூண்டோடு அழிக்க, சிவபெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற வேண்டி, அர்ச்சுணன், தபசு மரத்தின் கீழ், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்த பின், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. அர்ச்சுணன் வேடம் அணிந்தவர் ஆசி வழங்கினால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதோடு, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது. இதனால், பல்வேறு கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டதுடன், தபசு மரத்தை சுற்றிலும் குப்புற படுத்துக் கொண்டனர். அவர்கள் மீது அர்ச்சுணன் வேடம் அணிந்தவர் நடந்து சென்று ஆசி வழங்கினார். பின்னர் அர்ச்சுணன், தபசு மரத்தின் ஒவ்வொரு படிக்கட்டுக்கும் பாடல் பாடியபடி தபசு மரம் ஏறினார். விழா ஏற்பாடுகளை ஏழு ஊர் நாட்டார்கள் செய்திருந்தனர்.