ADDED : ஆக 25, 2024 01:03 AM
கிருஷ்ணகிரி, ஆக. 25-
கிருஷ்ணகிரியில், உலக சமுதாய சேவா சங்கம் ஓசூர் மண்டலம், கிருஷ்ணகிரி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் தவமையங்கள் இணைந்து நேற்று மனைவி நல வேட்பு நாள் விழாவை நடத்தினர்.
இறை வணக்கத்தை பேராசிரியர் ராஜம், குரு வணக்கம் குறித்து துணை பேராசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் பாடினர். அறக்கட்டளை பொறுப்பாசிரியர் மகாலிங்கம் வரவேற்றார். ஓசூர் மண்டல தலைவர் ராஜூ முன்னிலை வகித்தார். நிர்வாக அறங்காவலர் சண்முகம் தலைமை வகித்தார். மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து பொருளாளர் பாலதண்டாயுதம் பேசினார். சேலம் மனவளக்கலை மூத்த பேராசிரியர் விவேகானந்தர் பேசினார்.
இதில், 35 தம்பதியர் கலந்து கொண்டனர். இவர்கள் முதலாவதாக தம்பதிகள் ஒருவருக்கொருவர் காப்பு கயிற்றை கட்டினர். பின்னர் மாலைகளை மாற்றிக் கொண்டனர். இதையடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கைகளை பற்றி கொண்டு, தங்களது திருமணம் முடிந்ததில் இருந்து, இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து மகிழ்ந்தனர்.
தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால், காந்த பரிமாற்றம் நடக்கும். திருமணம் நடந்த நாள் முதல், கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் செய்தவற்றை நினைத்து பார்ப்பதன் மூலம், அவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்பதும், இந்த விழாவின் சிறப்பம்சம். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளை விஸ்வபிரியா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிந்தசாமி செய்திருந்தார்.