ADDED : ஜூலை 29, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்மசுவாமி கோவில் தெருவிலுள்ள ஏகாம்பரேஸ்வர காமாட்சியம்மன் கோவிலில் நேற்று, 24ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா மற்றும் பால்குட ஊர்வலம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம் உள்ளிட்டவை நடந்தது.
காலை, 11:00 மணிக்கு, செண்டை மேளம், பம்பை வாத்தியங்களுடன், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், சிவன், பார்வதி, விநாயகர், முருகன் வேடம் அணிந்த பக்தர்களுடன், 100க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து, பால்குட அபிஷேகம், தீபாராதனை, அம்மனுக்கு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை ஆகியவை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆடிப்பூர திருவிழாவையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்மசுவாமி கோவில் தெருவிலுள்ள தண்டு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. இதில், அம்மன் வேடமணிந்த பக்தர்களுடன், உற்சவர் அம்மனுடன், ஏராளமான பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதே போல், மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.