/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இடம் பெயர்ந்த ஒற்றை யானை நெடுஞ்சாலையோர வனத்தில் முகாம்
/
இடம் பெயர்ந்த ஒற்றை யானை நெடுஞ்சாலையோர வனத்தில் முகாம்
இடம் பெயர்ந்த ஒற்றை யானை நெடுஞ்சாலையோர வனத்தில் முகாம்
இடம் பெயர்ந்த ஒற்றை யானை நெடுஞ்சாலையோர வனத்தில் முகாம்
ADDED : ஆக 24, 2024 07:30 AM
ஓசூர்: ஓசூர் அருகே, பேரண்டப்பள்ளிக்கு இடம் பெயர்ந்த ஒற்றை யானை, தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட செட்டிப்பள்ளி காப்புக்காட்டிற்கு, கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை, ஒற்றை ஆண் யானை இடம் பெயர்ந்தது. இதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, எலசேப்பள்ளி, குண்டுகுறுக்கி வழியாக சென்று, காமன்தொட்டி அருகே கங்காபுரம் கிராமத்திற்கு வந்தது.
அதிகாலை நேரத்தில், வீட்டில் இருந்து வெளியே வந்த மக்கள் ஒற்றை யானை சுற்றித்திரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்து சென்ற யானை, பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் உள்ள, பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் யானை முகாமிட்டுள்ளதால், அது எப்போது வேண்டுமானாலும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாய்ப்புள்ளது.
இந்த யானை இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயரும் வாய்ப்புள்ளதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டது. பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை உள்ளதால், சுற்றியுள்ள கதிரேப்பள்ளி, பேரண்டப்பள்ளி, கங்காபுரம், காவேரி நகர் உட்பட பல்வேறு கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையை ஒற்றை யானை கடந்தது. இதையறிந்த வனத்துறையினர் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி, யானை பாதுகாப்பாக சாலையை கடக்க உதவினர். சாலையை கடந்த யானை, சானமாவு வனப்பகுதி நோக்கி சென்றது.