/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சோதனை சாவடியில் 'ரெய்டு' ரூ.2.25 லட்சம் பறிமுதல்
/
சோதனை சாவடியில் 'ரெய்டு' ரூ.2.25 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூலை 06, 2024 02:57 AM
ஓசூர்:தமிழக எல்லையான ஓசூர் சோதனைச் சாவடியில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத, 2.25 லட்சம் ரூபாய் சிக்கியது.
தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி தேசிய நெடுஞ்சாலையோரம், போக்குவரத்து சோதனைச்சாவடி - உள்வழி இயங்கி வருகிறது. இங்கு, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும், பாடி கட்டாத வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.
மேலும், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் 'டாடா ஏஸ்' போன்ற சிறிய அளவிலான சரக்கு வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவது; அதிக லோடு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற பணிகளை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். பர்மிட், அபராதம், வரி விதிப்பு போன்ற பணிகளுக்கு, கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, டி.எஸ்.பி., வடிவேல் தலைமையிலான போலீசார் நேற்று காலை, 6:10 மணிக்கு சோதனைச்சாவடியில் சோதனை செய்தனர்.
அப்போது கணக்கில் வராமல், 2 லட்சத்து, 25,950 ரூபாய் இருந்தது. பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல்குமாரிடம் விசாரித்தனர். அவரிடம் சரியான கணக்கு இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த போலீசார் மதியம், 1:00 மணிக்கு சோதனையை முடித்து கொண்டனர். இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல்குமார் மற்றும் ஊழியர்கள் மீது, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.