ADDED : ஆக 05, 2024 02:18 AM
கிருஷ்ணகிரி, ஓசூர் வனக்கோட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேலுமலை வனப்பகுதியில், நீண்ட நாட்களாக ஒற்றை ஆண் யானை முகாமிட்டுள்ளது. கடந்த மாதம், 25ம் தேதி யானையை விரட்ட முயற்சியில் வனத்துறையினர் ஈடுட்டபோது, சூளகிரி அடுத்த கும்மனுார் அருகே, வன காவலர் நரசிம்மன் மற்றும் மின்வாரிய லைன்மேன் மகேந்திரன் ஆகிய இருவர், யானை தாக்கி படுகாயமடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, குருபரப்பள்ளி அருகே மணியாண்டஹள்ளி, விநாயகபுரம், ராகிமானப்பள்ளி பகுதியில் சுற்றித்திரிந்தது. அங்கிருந்து போடரஹள்ளிக்கு சென்ற யானை, ஒரு ஏக்கர் நெல் தோட்டம் மற்றும் வாழை மரங்கள், கரும்பு தோட்டத்தை சேதப்படுத்தியது. பின்னர், மார்க்கண்டேய நதி மற்றும் தென்பெண்ணை ஆறு சந்திக்கும் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. அதை நேற்று மாலை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.