/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
/
கிருஷ்ணகிரி கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
கிருஷ்ணகிரி கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
கிருஷ்ணகிரி கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
ADDED : ஜூலை 24, 2024 06:56 PM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கனிமவள கொள்ளை நடந்திருப்பதாக ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் ராதாகிருஷ்ணன் தொடர்ந்தார்.
இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன், விசாரணைக்கு வந்தது. இதில் கிருஷ்ணகிரி அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 198 கோடி ரூபாய் அளவிற்கு கனிமவள கொள்ளை நடந்துள்ளதாகவும் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்படவுள்ள விளக்கங்கள் குறித்தும், கிருஷ்ணகிரி மாவட்ட கோவில் நிலங்களில் நடந்துள்ள கனிமவள கொள்ளை குறித்தும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த பாலேகுளி பெருமாள் கோவில், பட்டாளம்மன் கோவில், தேன்கனிக்கோட்டை அடுத்த நாகமங்கலத்தில் உள்ள ஹனுமந்தராயசுவாமி கோவில் நிலங்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவரை மாவட்ட கலெக்டர் சரயு வரவேற்றார்.
கோவில் நிலங்களை ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பாலேகுளி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 7.04 ஏக்கர் நிலத்தில், 2.74 ஏக்கர் நிலத்திலும், பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான, 5.63 ஏக்கர் நிலத்தில், 1.42 ஏக்கர் அளவிலும் கனிமவள கொள்ளையும், அதன் கழிவுகளையும் இங்கே கொட்டியும், 4.16 ஏக்கர் நிலங்களை அழித்துள்ளனர். கடந்த, 2014-15 ஆண்டுகளில் கனிமவளத்தை வெட்டி எடுத்து அதில் மண்ணை கொட்டி மூடி உள்ளனர். இது குறித்தும், கடந்த ஆண்டுகளில் ஹிந்து அறநிலையத்துறைக்கு வந்த தகவல்கள்படியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது. இதன் அடுத்த வாய்தா நாளை (26ம் தேதி) வரவுள்ள நிலையில் இது குறித்த விரிவான அறிக்கை தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்படும்.கடந்த, 3 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் தான் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. 6,075 கோடி ரூபாய் மதிப்பில், 1.69 லட்சம் ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு ஹிந்து அறநிலையத்துறை சார்பில் கல் நடப்பட்டுள்ளன. 38 மாவட்டங்களிலும் இதற்கென் தனி தாசில்தார் அமைத்து சிறப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவில் நிலங்களை பட்டா மாற்றம் செய்த, 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீண்டும் கோவில் பெயருக்கே பட்டா செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு உள்ளன. கோவில் நில மீட்பு அலுவலர்களுக்காக ஆண்டுதோறும், 10.50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் நிலங்களை அளப்பதிலும், அடையாளம் காண்பதிலும் இருக்கும் சிக்கல்களை தாண்டி அளவீட்டு பணிகள் நடக்கிறது. மற்ற மாவட்டங்களை போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் விபரங்களும் இணையத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். கோவில் விபரங்கள் டிஜிட்டல் மயமாக்குவதற்காக, 4 கோடி பக்கம் இதுவரை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஆவணங்களும் அடங்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்து அறநிலையத்துறை துணை கமிஷனர் சுதர்சனம், கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஹிந்து அறநிலையத்துறை, கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.