/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலி பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு
/
போலி பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு
போலி பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு
போலி பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு
ADDED : ஆக 22, 2024 11:25 PM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, மேலும் ஒரு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், போலி பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை போலீசார் பதிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில், இரு வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட போலி என்.சி.சி., முகாமில், 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன், 35, கைது செய்யப்பட்டார்.
மேலும் ஐந்து பயிற்சியாளர்கள், குற்றத்தை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தினர் நான்கு பேர் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் சில தனியார் பள்ளிகளும், பதிவே இல்லாத தங்கள் பள்ளிகளில் என்.சி.சி., முகாம் நடத்தியதாகவும், அங்கும் சிவராமன் மாணவியருக்கு பயிற்சி என்ற பெயரில், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. சிவராமன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கிருஷ்ணகிரி அருகிலுள்ள தனியார் பள்ளியில், இந்தாண்டு ஜனவரியில், இதேபோல என்.சி.சி., முகாம் என்ற பெயரில் சிவராமன் நுழைந்துள்ளார். அப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தற்போது, சிவராமன் கைது செய்தியை பார்த்த மாணவி, தனக்கு நடந்த கொடுமை குறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, சிவராமன் மீது, மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிந்துள்ளனர்.
இதுதவிர, 36.62 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திலும், போலி ஆவணங்கள் கொடுத்து பணம் பறித்ததாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதுவரை சிவராமன் மீது, இரு போக்சோ மற்றும் ஒரு பணமோசடி வழக்கு பதிந்துள்ள போலீசார், மற்ற புகார்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.