/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எரிந்த கன்டெய்னர் லாரி டூ-வீலர்கள் தீயில் நாசம்
/
எரிந்த கன்டெய்னர் லாரி டூ-வீலர்கள் தீயில் நாசம்
ADDED : ஜூலை 10, 2024 10:02 PM

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் பகுதியில், டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கிருந்து டூ-வீலர்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி, ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு நேற்று மதியம், 1:30 மணிக்கு புறப்பட்டது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம்நரேஷ், 45, என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார்.
உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையில், போடிச்சிப்பள்ளி பகுதியில் லாரி சென்றபோது, தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசிய கன்டெய்னர் லாரி தீப்பிடித்தது. அப்போது, லாரியின் பின்னால் பைக்கில் வந்த வாலிபர்கள் அதை பார்த்து, டிரைவரை உஷார் படுத்தினர்.
தமிழ் தெரியாத அவரால் வாலிபர்கள் கூறியதை அறிய முடியாமல், லாரியை நிறுத்தாமல் ஓட்டி, கெலமங்கலம் - ஓசூர் சாலைக்கு வந்தார். கெலமங்கலத்தை தாண்டி, பைரமங்கலம் பிரிவு சாலை அருகே மதியம், 2:00 மணிக்கு வந்தபோது, லாரியின் பின்பகுதியில் தீப்பிடித்ததை உணர்ந்தார். உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, கீழே குதித்து உயிர் தப்பினார்.
தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தீயணைப்புத்துறையினர் வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், கன்டெய்னர் லாரிக்குள் இருந்த, 40 டூ-வீலர்கள் மற்றும் லாரி நாசமாகின.